பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(216)

II-

அப்பாத்துரையம் - 42

கலைஞர்கள், கல்வி ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆகிய யாருமே போட்டியிடத்தான் செய்கின்றனர். தத்தம் துறையில் உச்ச அளவு வெற்றி அல்லது புகழ் அல்லது வருவாய் பெறுவதற்காக! இங்கே வருவாய் முதல் நோக்கமாகவோ முதன்மை நோக்கமாகவோ கூட இருப்பதில்லை. ஏனெனில், வருவாய் மற்ற இரண்டையும் வளர்க்காது. மற்ற இரண்டும் தற்காலிகமாக வருவாய் தராது போயினும் நிலையாக அதைப் பேணி வளர்க்கும் தன்மை யுடையன. தொழில் துறையிலும்கூட ஆதாய நோக்கும் ஊதியநோக்கும் நிலையான முதல்நோக்கோ, முதன்மைநோக்கோ ஆகமாட்டா. வெற்றி, புகழ், சமூகப்பணி ஆகிய நோக்குக்கள் உயர் நோக்குக்கள். ஏனெனில், அவை ஆதாயத்துக்கு அடிப்படையான சமூகத்தை உயர்த்திப் பின் ஆதாயத்தை நிலையாக உயர்த்துகின்றன.

நாகரிகத்துக்கும் மனித வளர்ச்சிக்கும் அடிப்படைப் பண்புகளான போட்டி, போராட்ட உணர்ச்சியைப் பழித்து அவற்றின் தலையில் மற்றத் தீமைகளையெல்லாம் போடுபவர், போட்டியை ஒழித்துவிடவும் கனவு காணலாம். ஆனால், போட்டியை ஒழித்துவிட்டால் சமூகம் அழியும்; நாகரிகம் வளர்ச்சி குன்றும். மனித இனம் படிப்படியாக விலங்கு நிலைக்குப் பின்னோக்கிச் செல்லும். இந் நிலையை வற்புறுத்தினால் பிறப்படிப்படையான வகுப்புகள் தோன்றிவிடும். இந்தியாவில் பிறப்படிப்படையான வகுப்புக்கள் பின்னும் சீர்கெட்டுச் சாதிமுறையாகியுள்ளன. உலக சமுதாயம் போட்டியும் நேர்மையும் இல்லாவிட்டால், எப்படி வருங்காலத்தில் கெட்டுவிடக் கூடும் என்பதை இந்தியாவின் இவ் விலங்குநிலை நாகரிகம் எச்சரித்துக் காட்டுகிறது. சாதிமுறை எந்த நாட்டிலேனும் தோன்றி விட்டால், அது அதன்பின் மனித உலகின் ஒரு நாடாயிராது; மனித சமுதாயத்தை அழிக்க வல்ல கோடரிக்காம்பாய் நிலவும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பழித் தீங்கு உலகெங்கும் பரந்துவிடாமலிருக்க வேண்டுமானால், அன்பு, நேர்மை, சரிநிகர் வாய்ப்புக் கூட்டுழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த போட்டி பெருகவேண்டும். உலகில் இந்த நிலை பெருகுமானால், இந்திய நாகரிகம்கூடத் தன் அழிவுப் பாதையிலிருந்து திருந்தி மனித நாகரிகம் நோக்கி முன்னேற வழியுண்டு.