238
அப்பாத்துரையம் - 42
முன்னேறுவிக்க அவர் உறவினர் எண்ணி, தமக்குள்ளே பணம் சேர்த்து 50 பொன் திரட்டி உதவினர். அவர் சட்டக் கல்லூரிக்குப் போகும் வழியிலேயே குடித்துச் சூதாடி அதைத் தீர்த்துவிட்டார்!
கடன் வாங்குவதை ஒரு கலையாக்கியவர் ஷெரிடன் என்றால், வறுமையை ஒரு கலையாக்கியவர் கோல்டுஸ்மித் என்னலாம். கையில் ஒரு காசின்றி அவர் ஐரோப்பாவில் ஒரு நாடு குறையில்லாமல் சுற்றிவந்து விட்டார். கையில் ஒரு யாழுடன் பாடி இரந்துகொண்டே அவர் பயண முடித்தார். ஆனால், போன இடத்திலெங்கும் நண்பர்களைக் கண்டால் திருப்பித் தராத நாகரிகக் கடன் வாங்கி, அதை உடனே அழிக்கவும் தவறிய தில்லை. சிக்கனமற்றவராயிருப்பதுடன் அவர் அமையவில்லை. சிக்கனமற்ற பலருக்கும் அவர் ஒரு வள்ளலாய் உதவி, சிக்கனமற்ற ஏழை வள்ளன்மைக்கு ஓர் இலக்கானார். எடின்பர் நகரத்தில் மருத்துவக் கல்விப் பயிற்சிக்குச் சென்ற அவர், மற்ற ஒரு நண்பன் கடனுக்குப் பிணையமாய் நின்று, அது காரணமாகப் பல்கலைக் கழகப் பயிற்சியிலிருந்து விலக்கப் பட்டார். கடன் வாங்கவும் கடன் இரக்கவும் இங்ஙனம் தயங்காத அவர், தமக்கு நண்பர் உதவிய போது மட்டும் அதை ஏற்க மனம் ஒப்பவில்லை என்பது புதுமை யாகவே இருக்கிறது. நல்ல காலணியில்லாமல் அவர் வெளியே செல்லமுடியாது அடைத்துக் கிடந்தபோது, புதுக்காலணியை அவரறியாமல் வாயிற்படியில் இட்ட நண்பன் செயல் அவர் மான உணர்ச்சியைக் கிளறிற்றாம்! அவர் காலணியற்ற நிலையில் அப் புதிய காலணியை வீசி எறிந்து விட்டாராம்!
கடன்பட்ட பெரியாருள் கடனைத் தீர்க்கப் போராடிய வீரர் ஸ்காட். அவர் கடன் அவர் பெருந்தன்மையின் பயன்மட்டுமே. அவர் இறக்கும்வரை அதைத் தீர்க்க ஈயாய் எறும்பாய் உழைத்தார். பெரும் பகுதியைத் தீர்த்தும் விட்டார். மீந்த பகுதியும் அவர் மருமகனால் தீர்க்கப்பட்டது. ஆனாலும் முழுக்கடனும் தீராத வருத்தத்துடனேயே மான உணர்ச்சிமிக்க இப்பெரியார் உயிர்விட வேண்டிவந்தது. கலைஞர் ஓரளவு குறைகளை உடையவரானாலும், அதை நீக்க அரும்பாடுபட்ட கலைஞர் இவர். தொடக்கத்திலிருந்தே இப் பண்பை அவர் பேணியிருந்தால், அவர் தம் வாழ்வில் முழுவெற்றி பெற்றிருக்கக்
கூடும்.