9. நல்வாழ்வுடைய இல்லங்கள்
'நாகரிகத்தின் மிகச் சிறந்த காப்பகம், வீடு!”
- பி. டிஸ்ரேலி.
"ஏழையர் கலைப்பண்பு தூய்மை”
-ஆங்கிலப் பழமொழி.
"அழுக்கு, அருவருப்பு ஆகியவற்றிடையே நற்பண்பு இயங்கமுடியாது.
-கோமகன் ரம்ஃவோர்டு.
"உதவும் நற்பண்புத் தெய்வம் பலபல
நிதமும் மாந்தர் துணைதர நிற்பன;
பதனில் மாந்தர் அடிபட் டழிந்து, நோய்
இதம்செய் நன்மருந் தாமவை பொன்றுவ!”
- ஜார்ஜ் ஹெர்பர்ட்
உடல்நலமே உண்மைச்செல்வம் என்பது பழமொழி. உடல்நல மில்லாதவிடத்தில் செல்வம் முற்றிலும் பயனற்றுப் போவது காணலாம். பெருஞ்செல்வர் தம் செல்வ முழுதும் கொட்டி உடல்நலம் பெறத் துடிப்பதும் நாம் காணாததன்று. ஆயினும், பெருஞ்செல்வர் செல்வத் தாலும் கிடைத்தற்கரிய இவ் வுயர்செல்வம் உடலுழைப்பாளிகளுக்கும் உள உழைப்பாளி களுக்கும் வெவ்வேறு வகையில் எளிதாகக் கிடைக்கின்றது. உழைப்பால் மட்டுமே பெறத்தக்க இவ் அகச்செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பளிக்க மட்டுமே புறச்செல்வம் தேவைப்படுகிறது. இப் புறச் செல்வமும் உழைப்பாளிகள் உழைப்பின் பயனாகவே வருவதாயினும், மனித நாகரிகப் போக்கில், உழைப்பாளிகளின் தவறுகளாலும் ஒற்றுமைக் குறைவாலும் உழைப்பற்ற ஒரு வகுப்பார் தோன்றி அதனைக் கைப்பற்றிச் செல்வராக முடிந்துள்ளது.
மனிதர் புற உடலமைப்பும் அக உடல் அஃதாவது உளத்தின் அமைப்பும் உழைப்பு, இன்பம் ஆகிய இரண்டை எதிர்நோக்கியே அமைந்துள்ளது. உழைப்பு அதனை வளர்க்கிறது. இன்பம் நோக்கி