72
||--
அப்பாத்துரையம் - 42
அவன் பற்றும் பற்றுக்கோடு வேறு இல்லை. நீரில் தத்தளிப்பவன் துரும்பு என்று தெரிந்தும் அதனை எட்டிப் பிடிப்பதுபோல் அவன் என் நட்பின் சிறு சின்னங்களைப் பற்றித் தன் துயர்க் கடலில் மிதந்தான்.
நண்பர் பிரிவுத் துயரிலாவது பங்குகொள்ள முடியும், சிறிது ஆறுதல் கூற முடியும். அது கைகால் துண்டிக்கப் படும்போது படும் துயரம் போன்றது.ஆனால், பிரிவுற்ற வாழ்வின் நீடித்த துயரத்தை உறுப்பின்றி வாழும் உடலின் துன்பத்தை எவ்வாறு எளிதிற் பகிர்ந்துகொள்ள முடியும்? என் நண்பனது வாழ்நாள் முழுதும் அத் துயரம் எவ்வளவு ஆறினாலும் அதன் தடம் அவனை விட்டகலவில்லை. வெளிப்புண் ஆறினாலும் அகப்புண் மாறவில்லை என்பதை அவன் முகம் காட்டிற்று. பிற இன்பங்களில் மனத்தை ஈடுபடுத்துதல், வாழ்வின் அடிப்படைக் கடமைகளில் கருத்துச் செலுத்துதல், வாழ்வின் தொலை நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய மெய்யறிவு பெறுதல் இவையே அப் புண்ணை ஓரளவு ஆற்றவல்லது. இம் முயற்சி களில் ஈடுபட்டே நான் என் நண்பனைத் துன்பக் கேணியிலிருந்து கூடியமட்டும் நெடுந்தொலை விடுவிக்க முடிந்தது.
கணவன் மனைவியர் ஒரே வாழ்க்கையை ஒருவரூடாக மற்றவர் துய்ப்பவர் ஆவர். ஒரு பொருளையே இரண்டு கண்கள் பார்ப்பது போன்றது அவர்கள் வாழ்வு. ஆகவே, ஒருவர் பிரிந்தால் ஒருவர் துயரம் பிரிவுத் துயரம் மட்டுமன்று. உலக வாழ்வின் ஒவ்வொரு பொருளும், செய்தியும் அவர்கள் தொடர்பை ஓயாது நினைவுபடுத்துவதுடன், காலற்றவன் ஓட்டம்போல் ஒவ்வொரு படியிலும் அப்பிரிவின் விளைவை அவர்களுக்கு உறுத்திக் காட்டிக்கொண்டேயிருக்கும். இவ்வுண்மையை மில்ட்டன் தன் காப்பியத்தில் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். ஏவா வானுலகத்தின் இன்பங்களிடையே கூட, ஆதாம் இல்லாக் குறையால் எந்த இன்பத்திலும் துன்பத்தையே அடைவதாக அவர் சித்தரித்துள்ளார்.
நின்னுடன் உலவுறும் காலை, காலம் உன்னிலன், பருவமும் போதும் ஒன்றெனக் கருதினன்; கதிரவன் எழுந்திடும் போது வருசிறு பறவைகள் மகிழ்வுறப் பாடின.