பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

99

பல பாரக்கல் எடையுடைய இயந்திரத்தைக் கீழே எப்படி இறக்குவது? அச்சட்டத்திலிருந்து எப்படி பெயர்ப்பது? இவற்றைச் செய்யக் கருவிகள் வேண்டுமே! உளி, சுத்தி, ஆணி திருகி, முடுக்கி, ஆணிகள், பணிமரங்கள் இரும்பு ஆகியவற்றுக்கு எங்கே போவது? இவ்வளவும் செய்ய ஓராள் போதுமா? எத்தனை நாள் பிடிக்கும்? உணவுக்கு என்ன செய்வது? குடி தண்ணீருக்கு எங்கே போவது? காற்றுக்கும் மழைக்கும் எங்கே ஒதுங்கு வது? இரவு துயில்வது எங்கே? இவ்வண்ணம் எண்ணற்ற கேள்விகள் கில்லியட்டின் உள்ளத்தைத் துளைத்தன.

இத்தனை வேலையும் கூடிய விரைவில் ஆகவும் வேண்டும். கப்பலை ஆங்கார வேகத்தில் அன்று அழித்த கடலும் புயல் காற்றும், இயந்திரத்தை நீடித்து நின்று அழிக்க முடியும். அதன் பளுவே காற்றடிக்கும்போது அதை விழச்செய்து விடலாம், கடலில் விழுந்தால் அதை மீட்பது அரிது.

எப்படியும் வேலையில் இறங்கியாய் விட்டது. இனி இயந்திரத்தை மீட்க முடிந்தால், அதனுடன் ஊர்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கடலுக்கும் புயலுக்கும் தன்னை ஒப்படைத்து விடுவது என்று அவன் துணிந்தான்.

சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்காலளவு என்பார்கள். சமுத்திரமும் அதனினும் கொடிய புயலும் அவற்றிலும் கடுமை வாய்ந்த அப்பாறையும் அவன் துணிச்சல் கண்டு கறுவுவது போல் தோற்றிற்று.

அவனிடம் ஒரு கத்தியிருக்கிறது. கப்பலில் சில சுத்தி, ஒன்றிரண்டு ஆணிகள், முடிச்சிட்ட ஒரு ஏறுவடம் ஆகியவை இருந்தன. சில மாப்பண்டச் சில்லுகள் (பிஸ்கோத்துகள்) சிறிது தண்ணீர் இருந்தது. அவன் முதலில் உண்டு களையாறினான்.பின் தங்கிடம் தேடினான்.

உயிரை வெறுத்து, அதேசமயம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அவன் நீந்தியும், வழுக்கலான பாறைகளில் நடந்தும், எங்கும் சுற்றிப் பார்வையிட்டான். தன் கப்பல் தங்குவதற்குரிய இடம் எது; கைப்பிடிக்கும், வேலைப் பாட்டுக்கும் உரிய பாறை விளிம்புகள் எங்கெங்கு உள்ளன; தங்க, இருந்து வேலை செய்ய, உணவு, கருவிகளை வைத்துக் காக்கத்தக்க இடம் எங்கே என்று தேடினான்.