இருதுளிக் கண்ணீர்
117
பிள்ளைகள் வாய்திறந்து கேளாமலே அவர்கள் தேவைகளறிந்து வழங்குபவள் தாய். அமருக்குத் தாய் இல்லை. தந்தையிடம் எதையும் கெஞ்சிக்கேட்டுத்தான் வாங்க வேண்டும். மாற்றாந்தாயிடமோ கெஞ்சினாலும் கிடையாது. அமரோ, யாரிடமும் எதையும் கேட்கப் பழகிக்கொள்ளவில்லை. தாய் தந்தையர் அவனை அசட்டைசெய்து வெறுக்க வெறுக்க, அவன், அவர்கள் பணம் அவர்கள் போக்கு ஆகியவற்றை வெறுத்தான். அவர்கள் விருப்பமறிந்து நடக்க அவன் முயலவில்லை. அவர்கள் வெறுப்பறிந்து நடந்தான். அவன் வளர வளர, இந்த வெறுப்பும் வளர்ந்தது.
தாய்க்கு அடுத்த உறவு தாரம் என்பது பழமொழி. அவ்வுறவுடைய ஒரு குழந்தை மனைவியும் அமருக்கு அம்மாளிகைக்குள்ளேயே இப்போது இருந்தாள். ஆனால் சமர்காந்த் பணத்தையே நாடிக்கொண்டே மருமகள், அந்தப் பணத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டாதவளாயிருந்தாள். அவள் பெயர் சுகதா. அவளுக்குத் தந்தை இல்லை. தாய் இரேணுகா ஆண்பிள்ளை இல்லாக் குறை தீர, அவளை ஆண் குடும்பக் கவலையும் பொறுப்பும் அறியாதவளாகவே வளர்த்திருந்தாள். இன்பத்திலேயே திளைத்த அந்நங்கையும் மணமில்லாத, ஆனால், அழகுடைய ஒரு வாடா மலராக விளங்கினாள்.
பிள்ளையாகவே
மணமாகி ஆண்டுகள் இரண்டாயிருந்தன. அதற்கிடையில் அவள் இரண்டு தடவைதான் கணவன் வீட்டுக்கு வந்தாள். இரண்டு தடவைகளிலும் ஒன்றிரண்டு நாட்களே தங்கினாள். கணவன் வீட்டுடன் தனக்குத் தொடர்பு உண்டு என்று அவள் நினைத்திருந்தாளே தவிர, அவள் கணவனுடன் வேறு தொடர்பு நாடவில்லை. எவரும் அதுப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. அமரும், மனைவி என்றால் தந்தைக்கு ஒரு மருமகள் என்ற அளவிலேயே மதித்திருந்தான்.
அவன் மாற்றாந்தாய் இப்போது இல்லை. இதனால் அவனை வெறுத்த ஒரு ஆள் குறைந்தது. ஆயினும், தந்தையும் அவனும் இன்னும் தண்ணீரும் எண்ணெயும் போலவே வாழ்ந்தனர். மாற்றாந்தாய்க்கு நைனா என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் அமரைவிட ஏழாண்டு இளையவள்.