பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

21. பாணன் காதம்பரீ

319

ஹர்ஷன் அவைப்புலவனான பாணன் ஹர்ஷ சரிதம் என்ற செய்யுட் காவியத்தையும், 'காதம்பரீ' என்ற உரைநடைப் புனை கதைக் காவியத்தையும் இயற்றிப் புகழ் அடைந்தான். காளிதாசன் கால இயற்கை நடையாகிய கௌட நெறியில் முதன்முதல் எழுதிய புலவன் இவனே என்னலாம். நைடதசரிதம் வரலாறு தழுவிய காவியமாயினும் அதில் வரலாற்றுச் செய்திகளை மறைத்துப் புனைந்துரையும் விரிவுரையும் சொல்லடுக்குகளுமே மிகுந்துள்ளன. கதைத் தொடர்பும் கட்டுக்கோப்பும் மிகமிகக் குறைவு. இக் குறைபாடுகள் அனைத்தும் காதம்பரீயிலும் உண்டாயினும் வட மொழியில் இதுவே இவ் விலக்கிய முறையில் முன்மாதிரியாய்க் கருதப்பட்டதால் பெருமையுற்றது. நீண்ட தொடர் மொழிகள், சமாசங்கள், வளைந்து வளைந்து செல்லும் வர்ணனைகள், சித்திர விசித்திரமான அணிகள் ஆகியவற்றின் விருந்து இந் நூல். “காதம் பரீச் சுவையறிந்தார்க்கு உணவுச்சுவை வேண்டாம்” என்ற வட மொழிப் பழமொழி இதன் தனிப்புகழுக்குச் சான்று. இவன் எழுதியதாக' அவந்தி சுந்தரி கதா’ மற்றோர் உரைநடை நூலும் அண்மையில் வெளிவந்துள்ளது. பாரவி, தண்டி ஆகியவர்கள் வாழ்க்கைபற்றிய குறிப்புக்கள் இதில் காணப்படுகின்றன.

22. தண்டி: தசகுமார சரதிம்: அணிநூல்கள்

பாணனைப் போலவே இருதுறைகளிலும் ஈடுபட்டு இரண்டிலும் பாணனைவிடப் பெருஞ் சிறப்புற்ற மற்றொரு புலவன் தண்டி. இவன் தமிழகத்தில் காஞ்சியில் வாழ்ந்தவன். பாரவியின் மரபில் வந்தவன் என்றுகூட அறிகிறோம். இவன் “காவியாதர்சம்” என்ற அணிநூலும் (அலங்கார சாஸ்திரமும்) தசகுமார சரிதம் என்ற புனைகதைக் காவியமும் இயற்றியுள்ளான். வடமொழியின் தலை சிறந்த அணிநூலாகிய காவியா தர்சமே அதன் முதல் அணி நூலாகவும் இருக்கக்கூடும். ஏனெனில், இவரே தமிழிலும் ‘தனி’ அணிநூலாகத் ‘தண்டியலங்காரம்’ இயற்றியவர் என்று கூறப் படுகிறது. ஆயினும். இவருக்கு முற்பட்டும் அணிநூல்கள் சில இருந்ததாக இவர் குறிக்கிறார். பாமஹன் என்ற அணி நூலாசிரியர் இவருக்கு முற்பட்டவர் என்று கூறுபவரும் உண்டு.