போதும் முதலாளித்துவம்
43
கான வகைகளையும் அவனுக்கு மறுக்கிறோம். நமக்காக உழைக்கும் உழைப்பின் மூலம் அவன் வாழ்நாளைக் குறுக்குகிறோம். தொழிற்சாலைகளில் மாட்டி அவன் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறோம். அதிக உழைப்பின் மூலம் அனாவசியமான நோய்களுக்கு அவனை ஆளாக்கி அவனை வதைக்கிறோம். 'ஆன்மாவின் வேதனைகளுள் மிகக் கொடிதாகிய வறுமையின் அச்சத்தால் அவனை ஓயாது தண்டிக்கிறோம். அவன் ஓயாது ஒழியாது உழைத்தும் அவன் மனைவி, பிள்ளைகள் அவன் முன்னாகவே நோயுற்று வாடி மாண்டு மடிகின்றனர். இத்தனையும் அவன்மீது சுமத்தியபின் குறைகூறுகிறோம்!
அவனைக்
“அவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையிருப்பதில்லை என்கிறோம். உழைப்பால் அடையமுடியாத நலனைச் சூதாட்டத்தில் அவன் தேடி ஏங்கி ஏமாறுவதைக் கண்டிக்கிறோம். இயற்கை வாழ்வில் கிடையாத ஆறுதலைக் குடியால் பெற விரும்புவதைப் பழிக்கிறோம். பழி பாவம் என்ற உயர்ந்த பாறையின் சரிவில் உருண்டுகொண்டு வரும் அவன் தன் பழிகள் மூலம் வறுமையைப் பெருக்கியும், வறுமையின் மூலம் பழிகளைப் பெருக்கியும் நச்சுச் சூழலில் பட்டுழன்று இறுதியில் இவற்றின் பயனாய் சமூகத்தில் ஒரு தொற்றுநோய் என மதிக்கப்படும்படி செய்து இழிவுபடுத்துகிறோம். இவ்வளவும் நம் நன்மைக்காகச் செய்தபின், நமது ஆன்மாவின் ஆறுதலுக்காக நமக்கினிதான ஒரு வேதாந்தம் ஏற்படுத்திக் கொள்ளுகிறோம். வாழ்க்கையில் நன்மை தீமைகளின் சந்தர்ப்பங்கள் அவனுக்கு இருந்தும் அவன் தீமைகளை நாடிய குற்றத்தாலேயே அவன் துன்புறுகிறான் என்று அவன் மீது தீர்ப்பளித்துக் கொள்கிறோம்: அல்லது இரங்கு கிறோம். அவனிடையேயும், அவன் தோழரிடையேயும் சென்று இரக்கத்தால் தூண்டப்பட்டு, சிக்கனம், மிதக்குடி, நன்னெறி, நல்லறிவு ஆகியவைபற்றி உபதேசிக்கிறோம். ஆயினும் அவ்வுப தேசத்தினிடையே கூட நம் நலனுக்கும் அவன் அழிவுக்கும் வேராயிருக்கும் உடலுழைப்பு பற்றியும் வற்புறுத்தாமல் நம்மால் பேச முடிவதில்லை. அவர்கள் உழைப்பின் மூலமே ஓடவல்ல உற்பத்திச் சக்கரத்தை அவர்கள் ஓயாது ஒழியாது ஓட்டினால் தான் அவ்வுழைப்பைச் சுரண்டி நாம் வாழ முடியும் என்பதை நம் நல்லெண்ணெப் பூச்சுக்களிடையேயும் நாம் மறப்பதில்லை.