ரூசோவின் சமூக ஒப்பந்தம்
79
வகையான தொடர்புடைய பொதுப் பெருந்தந்தை. மக்கள் அனைவரும் ஒரேவகை உடன்பிறந்தார் போன்ற உரிமை உடையவர். தனிமனித வேறுபாடுகள் கருத்து வேறுபாடு களிடையே ஒப்புரவு பேணப்படும் இவ்வியற்கைச் சமயம் எளிதாகவும் சிக்கல்கள் அற்றதாகவும், உரைகள், விளக்கங்கள் தேவையற்றதாகவும், பல வகைக் கருத்து வேறுபாடுகள், கட்சிகளுக்கு இடமில்லாத நிலையில் ஒற்றுமைச் சின்னமாகவும் அமைகின்றது.
இந்த இயற்கைச் சமயத்தினடிப்படையில் சமூக ஒப்பந்தம்; அதன் அடிப்படையில் அரசியற் சமூகக் குழு; அதன் இணக்கம் பெற்றும் விருப்பம் அறிந்தும் தத்தம் இயல்பு, திறம் ஆகியவற்றுக்கேற்ப அமைந்த அரசாங்க முறைகள், என மக்கள் நாகரீக சமூகம் முன்னேறிச் செல்கிறது. ஆனால் இயற்கை யோடொட்டிய அளவிலேயே அதன் முழு நிறை வெற்றி மலருமாதலால் அதன் வளர்ச்சி அடிப்படைப் பண்புகள் தழுவியும் அவற்றிற்கு மாறாக இல்லாமலும் இருத்தல் வேண்டும்.