பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை

91

திரு. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இவ்வகையில் பல நல்ல சான்றுகள் தந்துள்ளார். பிளேட்டோவின் காலத்திலிருந்து பெண்ணுரிமை பேசப்பட்டும், மேரி ஒல்ஸ்டன் கிராஃவட், சான் ஸ்டூவர்ட் மில் ஆகியவர்கள் அதற்காகத் தீவிரப் பிரசாரம் செய்தும் ஏற்படாத பயன், தொழில் துறையில் பெண்கள் புகுந்ததும் உடனே விளைந்தது. 16ஆம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்த இயக்க காலமுதல் 1688இல் நிகழ்ந்த ஆங்கில நாட்டுப் புரட்சி வரை ராபர்ட் ப்ரௌன் போன்ற அறிஞரும், வில்வியம் அவ் ஆரஞ்சு போன்ற அரசியற் சான்றோரும் எவ்வளவு முயன்றும் கைவரப் பெறாத சமய சமரச மனப்பான்மை, தொழில் துறை வளர்ச்சிக்குச் சமயப் பூசல் குந்தகம் ஆகும் என்பது உணரப்பட்டவுடனே வெற்றி பெற்றது.

மார்க்சீய பொருண்மைவாதத்தின் மூன்றாவது கூறு வகுப்புப் போராட்டக் கோட்பாட்டுக்குத் தனி ஊக்கம் தருவது. பழைய அமைப்பு மாறி புது அமைப்பு வரும்போதெல்லாம், அது இயல்பாக, சுமுகமாக வந்துவிடுவ தில்லை. புதுமை பழமையுடன் கடும் போராட்டமாடியே வெற்றியடைய முடியும். எனவேதான் ஒவ்வொரு சமூக அமைப்பிலும் நாம் இருவகையான மக்களைக் காணலாம். ஒரு சாரார் ஏற்கெனவே நிலை பெற்றுள்ள அமைப்பை ஆதரித்து நிற்பர். மற்றொரு சாரார் அதை மாற்றுவதில் ஆர்வங் கொள்வர். முதல் வகுப்புப் பெரும்பாலும் ஏற்கெனவே நிலைபெற்ற அமைப்பில் உரிமையாட்சி யுடையதாகவும். மற்ற வகுப்பு அதனைச் சார்ந்து வாழ்ந்து உரிமையற்றதாய், கடமையாற்றுவதாகவுமே இருப்பது காணலாம். ஆனால் உரிமை வகுப்பு தன் தனி நலன்களையே மொத்த சமூக நலன் என்று அந்த அமைப்பு முறையில் கூற முடிவதால், வகுப்பு வாதம் பேசாமலே அது சமூக அடிப்படையில் பேசித் தன் நலன்களை எளிதில் அடையும். உரிமையற்ற வகுப்பின் எதிர்ப்பை அது மொத்த சமூகப் பகைமை என்று கூறிச் சட்டப்படி தண்டிக்கும். ஏனெனில் சட்டம், கல்வி, ஒழுக்கம், நேர்மை, கடவுள் கொள்கை ஆகிய யாவுமே அவ்வச் சமூக அமைப்பு முறையில் அதனதன் ஆட்சிக் குழுவினரால் அமைத்துக் கொள்ளப்பட்டு அவரவர்கள் நலன்கள் சார்ந்தவையாகவே இருக்கும்.