110 ||
அப்பாத்துரையம் - 45
தமிழர் இன்று தம் வாழ்வியல் சமய அரசியல் அடிமைத் தனத்தினிடையேயும் தம் ஒப்பற்ற அறிஞரான திருவள்ளுவரை அவ்வளவாகப் போற்றவில்லை; ஆங்கிலேயரோ, தாம் உலகப் பேரரசின் முதல்வராக விளங்கும்போதும் அப் பேரரசையும், அதன் பெருஞ் செல்வத்தையும் விட உயர்வாக ஷேக்ஸ்பியரைப் போற்றுகின்றனர்.
2. முன்னோர்கள்
இலக்கியக் களஞ்சியமான ஷேக்ஸ்பியரின் முன்னோர் களைப் பற்றி மிகுதியாகத் தெரிவதற்கில்லை என்று மேலே கூறினோம். அவர் பாட்டன் ரிச்சர்ட்டு ஷேக்ஸ்பியர் என்பவர். ஆனால், அவர் தந்தையாகிய ஜான் ஷேக்ஸ்பியர் காலத்திலே தான் ஷேக்ஸ்பியர் குடி அவர் பிறப்பிடமாகிய ஸ்ட்ராட்ஃபோர்டு வந்து தங்கியதாகத் தெரிகிறது.
ஜான் ஷேக்ஸ்பியர் தையல், ஆடை வாணிபம், ஊன் விற்பனை ஆகிய பல தொழில்கள் செய்தவர். அவர் பெரிய வழக்காளி.வழக்குகள் சிலவற்றில் அடைந்த வெற்றியின் பயனாக அவருக்கு நிறைந்த செல்வமும், செல்வாக்கும் ஏற்பட்டன. அதன் வாயிலாக அவர் நகரவை உறுப்பினராகி நாளடைவில் அந்நகர்த் தலைவராகவும் (Alderman), தண்டலாள ராகவும் (High Bailiff), அமைதிக் காவலராகவும் (Justice of the Peace) விளங்கினார். ஷேக்ஸ்பியர் பிறந்தபின் அவர் வாழ்க்கை மிகவுங் கடுமை யடைந்தது. கடன்பட்டும், வழக்குகளில் தோற்றும் அவர் மதிப்பிழந்தார். நகரவையிலிருந்து இதனால் அவர் விலக்கப் படவும் நேர்ந்தது. ஆனால், இதற்கு முன் தம் வாழ்க்கையின் மாலைக் காலத்தில் அவர் மீண்டும் நல்நிலை பெற்றார். இஃது அவர் மகனார் இலண்டன் வாழ்வி லடைந்த வெற்றியின் சிறந்த பயனாகவே இருத்தல் வேண்டும்.
ஜான் ஷேக்ஸ்பியர் செல்வ நிலையிலிருந்தபோதுதான் மணம் புரிந்துகொண்டார். அதற்கேற்ப ஷேக்ஸ்பியரின் தாயாராகிய மேரி ஆர்டன் தங்கணவரினும் மேம்பட்ட உயர்குடியிற் பிறந்தவராயிருந்தார். ஆடவருள் உயர் குடியினரிடம் காட்டாத பற்றையும், உணர்வையும், உயர்குடிப் பெண்டிராகிய டெஸ்டிமோனா, இமொஜென் முதலிய