ஆங்கிலப் புலவர் வரலாறு
113
வேட்டையாடினர். ஸர் தாமஸ் அவர்கள் மீது வழக்குத் தொடர, ஷேக்ஸ்பியர் ஸர் தாமஸ்மீது வசைப்பாக்கள் எழுதி வெளியிட்டார். அது கண்டு வெகுண்ட அவர், பின்னும் கடுமையான நடவடிக்கைகளில் முனைந்தார். அவற்றினின்று தப்பும் எண்ணத்துடன் ஷேக்ஸ்பியர் லண்டன் நகருக்கு ஓடிச் சென்றார்” என்று அவர் எழுதுகின்றார்.
இலண்டனில் அவர் முதல் முதலிலேயே நாடகாசிரியராய் அமர்ந்து விடவில்லை. ஜான் டௌடல் குறிப்பிட்டபடி, அவர் முதலில் நாடக சாலையில் கையாளாகச் சேர்ந்து நடிகர்களுடன் படிப்படியாகப் பழகி இறுதியில் தாமும் ஒரு நடிகரானார். அதன்பின் அவர் நடிகர் பகுதிகளைப் படியெடுத்தும், பழம் படிகளைப் புதுக்கியும் கூட்டிக் குறைத்து மாற்றியும் பழகினார். 1593இல் அவர் இவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்று நாடக மேடையில் செல்வாக்கடைந்ததனால், அந்நாளைய சிறந்த நாடகாசிரியர்களின் நாடகங்களை மேடைக்குத் தக்கபடி திருத்தவும், அவர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதவும் தொடங்கினார். ஷேக்ஸ்பியரின் தொடக்க நாடகங்களான ‘ஆறாம் ஹென்றி', 'மூன்றாம் ரிச்சர்டு', 'டைட்டஸ் அன்ட் ரானிக்கஸ்' என்னும் மூன்றிலும் அவர் வேறொருவருடன் சேர்ந்துழைத்த உண்மை புலப்படுகின்றது. இத்தகைய உழைப்பில் அவர் வெற்றி கண்டார் என்பதில் ஐயமில்லை.
நாடகமேடைகளுடன் அவருக்கிருந்த நேரடியான பழக்கத்தின் பயனாக, அன்றைய பேர்பெற்ற நாடகாசிரியர் நாடகங்களையுந் திரித்து நல்ல மேடை நாடகங்களாக்கி அவர் புகழடைந்தார். இதனை ஒரு வகையிற் பிறர் புகழைக் கவரும் வேலையாக எண்ணினர் கிரீன் என்ற அந்நாளைய நாடகப் புலவர். 1592இல் அவர் இறக்குந் தறுவாயில் ஷேக்ஸ்பியரைப் பற்றி மனமுளைந்து கூறும் சொற்கள் இதனை வலியுறுத்து கின்றன. “தம்மினும் மிக்கார் நாடகங்களைத் திரித்து மாற்றித் தமதெனக் கூறி வீம்படித்துக் கொள்ளும் வீணர் ஆம், நடிகரிடையே நடிகராயிருந்து அரை நடிகராகவும் அரை நாடக ஆசிரியராகவும் புகழ்தேடும் போலிகள் உளர். அவர்களிடையே அன்னத்தின் தூவிகளைத் தாங்கித் திரியும் காகம், புலித்தோல் போர்த்துத் திரியும் வேசரி ஒன்று உளது” என்று அவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு வரியைக் குத்திக்காட்டிக் கூறினர்.
--