ஆங்கிலப் புலவர் வரலாறு
121
விருப்பத்தை ஒட்டியே ‘மாக்பெத்'தும் இயற்றப் பெற்றது. ஷேக்ஸ்பியர் பாட்டியலில் மூழ்கிய எலிஸபெத் அவருடன் தேம்ஸ் ஆற்றில் படகில் உலவி மகிழ்ந்ததாகப் பென் ஜான்ஸன் என்ற அவர்காலப் பெரும் புலவர் கூறுகின்றார். அரசருடன் போட்டியிட்டுப் பெருமக்களும் அவருக்கு உதவி செய்தனர். “வீனஸும் அடானிஸும்" ஸதாம்ப்டன் பெருமான் பேருக்குச் சார்த்தப்பட்டது. அவர் நாடகங்களின் முதல் கோவை கூட அவரிடம் நட்புப்பூண்டு காலஞ்சென்ற பெம்புரோக் பெருமான், மான்ட்கோமரி பெருமான் ஆகிய இருவர் பேரால் வெளியிடப்பட்டது. இங்ஙனம் பெரியோர் ஆதரவு பெற்று ஷேக்ஸ்பியர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தம் இறுதி நாட்களைக் கழித்து 1612ஆம் ஆண்டு இவ்வுலகு நீத்துப் புகழுலகேகினர்.
அவருக்குப்பின் அவர் புதல்வி சூசன்னா 1649-லும், ஜூடித் 1662-லும் இறந்தார்கள்.
1623-இல் அவர் நாடகங்களின் கோவையான முதல் வெளியீடு ஏற்பட்டது.
இங்ஙனமாக உலகெலாம் புகழ்பரப்பும் ஆங்கில நாடக ஞாயிறு ஆங்கில நாட்டில் தன் வாழ்நாளைக் கழித்தது.