2. மில்ட்டன்
இறைபணிக்கே தம்மை ஆட்படுத்திய ஆங்கிலக் கவிஞர்
1. இளமையும் கல்வியும்
ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக் கடுத்தவரும், ஷேக்ஸ்பியருக்குக் கிட்டத்தட்ட ஒப்பானவரும் ஆன கவிஞர் பிரான் மில்ட்டனே யாவர்.
ஷேக்ஸ்பியர் எழுதியவை முப்பது நாடகங்களும் ஒன்றிரண்டு சிறு காப்பியங்களுமே. அவற்றுள் இறவாச் சிறப்புப்பெற்றவை நாடகங்களுள் பத்து அல்லது பன்னிரண்டு தலை சிறந்த நாடகங்களேயாகும். இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் எழுதும் இறையருள் பெற்ற இக்கவிஞர் பிரான் தாம் எழுதியதை இரண்டாம் முறை பாராத அளவு விரைவில் எழுதியமையால் எழுதிய நூல்களின் பெருமை யத்தனையும் அவர் இயற்கையறிவின் பெருமையேயாகும்.
ய
ஆனால் மில்ட்டன் சிறு காப்பியங்களும் எழுதியுள்ளார்; பெருங் காப்பியங்களும் எழுதியுள்ளார்; இரங்கற்பாக்களும், நாடகங்களும் எழுதியுள்ளார். போக உரை நூல்களும் எண்ணில அந்நாளைய பிற நாட்டுப் புலவர்களுடன் அந்நாளைய புலவர் பொது மொழியாகிய இலத்தீனத்தில் நூல் வெளியீட்டு மூலம் சொற்போர் புரிந்தும் உள்ளார். இவர் ஷேக்ஸ்பியர் போன்றே அருட்கவி என்பதில் ஐயமில்லை யாயினும், அருளுடன் அறிவையும் முயற்சியையும் ஒருங்கே பயன்படுத்தி அருளுக்கோர் அருந்திறன் தந்தவர் ஆவர். இவர் முதல் முதல் எழுதிய கவிதைகளில் கூட உயர்ந்த செம்மைப்பாடு உள்ளதென்பதில் ஐயமில்லை. ஆனால் பிற்காலக் கவிதையில் இதனோடு கூட ஆழமும் பொருட் செறிவும் வினையாண்மையும் அகலமும் உள்ளன. இவர் எழுதிய ஒவ்வொரு வரியும் உணர்ச்சி வேகத்தில் உருவாக்கப் பெற்றுப் பின் அறிவாற்றல் கொண்டு நன்கு