128
அப்பாத்துரையம் - 45
இந்நூல்களின் உரைநடை மிகவும் செழுமையும் நயமும் உடையது. ஆயினும் அடிக்கடி அது கடுமை என்னும் ஒரு வழுவிற்கு மட்டும் ஆளாயிருந்தது. மில்ட்டன் இந்நூல்களை அரசியல், வாழ்வியல் பணிகளுக்காகச் செய்தனரே யன்றி நூல்கள் என்ற இலக்கிய நோக்கால் எழுதவில்லை. இதையே அவரும் “எனது வலக்கை கவிதைக்கும் இறைவன் புகழுக்கும் மட்டுமே உரியதாகலின், இந்நூல்களில் என் இடக்கையின் ஆற்றலையே காணலாகும்” எனக் கூறினர்.
இங்ஙனம் வலக்கை வாளா இருந்த காலத்தில் அது வளராது அங்ஙனமே இருந்துவிடவில்லை. முன்னம் அவர் கவிதையில் எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் காணப்படும் மென்மையும், நயமும் மட்டுமே தலைசிறந்திருந்தன. அரசியல், வாழ்வியல் முதலிய வினைத் துறைகளி லீடுபட்டு
உலகமக்களுடைய உள்ள நிலைகள், எண்ணப் போக்குகள் ஆகியவற்றில் தோய்ந்து அவற்றின் உள்ளுறை நுட்பங்களை யும் பொருள் திட்பங்களையும் அறிந்தபின்தான் மில்ட்டன் கவிதை ஹோமர், கம்பர், காளிதாசர், தந்தே முதலியவர்களின் கவிதைகளுக் கொப்பாக மென்மையும், உரமும், சொல் நயமும், பொருள் நயமும் செறிந்து விளங்கலாயிற்று.
இல் பென்ஸரோஸோ (நிறைமகன்) என்ற கவிதையில் இவரே குறிப்பிட்டபடி துன்பமே இவருக்கு உயர் அறிவுக் கண்ணைத் தந்து இவர் கவிதையையும் தெய்வீகக்கவிதை யாக்கிற்று என்னலாம். அத்துன்பங்களுள் அவர் கண்ணொளி யிழந்தது ஒன்று. கற்பரசியாய், அவருக்கு வலக்கையாய் இருந்த அவருடைய இரண்டாம் மனைவி இறந்தது இன்னொன்று. அவருடைய மூன்று புதல்வியரும் அவருக்கு உதவி செய்தனராயினும், அவர்கள் என்றும் அவர் இரண்டாம் மனைவி யவ்வளவு அவர் குறிப்பறிந்தவரல்லர். அவரது மூன்றாவது துயர் அவரது கட்சி வீழ்ச்சியுற்றதேயாகும்.
இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் தம் கருத்தை முற்றும் போக்கியிருந்த இக் கவிஞர் பெருமான், தம் வாழ்க்கையின் நடுப்பகுதியில் இங்ஙனம் இவ் அறப்போர்களில் ஈடுபட்டுப் பெருவாரியாக எழுதவும் வாசிக்கவும் நேர்ந்தமையால், அவற்றால் கண் தெரியாதபடி கண்ணின் ஒளியையே இழந்தார்.