பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(152) ||

அப்பாத்துரையம் - 45

பழைய படைஞர் சென்றனராம். மான்ட்ரொஸின் பழங்கதை (Legend of Montrose) என்ற புனைகதையில் இத்தோழரையும் கூட வரைந்துதவியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இன்னொரு தடவை இதேமாதிரி முயற்சிகளில் இவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, எடின்பரிலிருந்து 30 கல் தொலைவரை சென்றுவிட்டார். உணவு வேளையானபின்தான் வீடு செல்ல இன்னும் 30 கல் தொலைவு உள்ளது என்ற உணர்ச்சி வந்தது. விடுதியில் உண்ணக் கையில் அரை வெள்ளி (6 பென்சு) கூட இல்லை; என் செய்வது? வீடுகளில் சென்று குடிக்க நீர் கேட்டு வாங்கி அதைக் கொண்டாவது வயிற்றை நிறைப்போம் என்று தொடங்கினாராம். ஆனால் தாய்ப்பாலுடன் அன்புப் பாலும் சேர்த்துண்ட அந்நாட்டு மாதர் அவர் நிலையைக் குறிப்பா லுணர்ந்து நீருக்கு மாறாகப் பாலே கொடுத்துதவினராம்.

4. குடும்ப வாழ்வு

உலகியல் அறிவு வாய்ந்த இவர் தந்தைக்கு இவை யனைத்தும் பித்தலாட்டங்களாகவே பட்டன. அவர் ஸ்காட்டைக் கெல்ஸோவிலும் எடின்பரிலும் பள்ளியிற் பயிற்றுவித்த பின்னர்ப் பல்கலைக் கழகத்துக் கனுப்பிச் சட்டப் பயிற்சியும் செய்வித்தார். சட்டப் பயிற்சியிலோ அப்பயிற்சிக்குப் பின் சட்டத் தொழிலிலோ அவர் ஊக்கங்காட்டாமல் பொதுமக்கள் கூட்டுறவிலும் களியாட்டங்களிலும் காலங் கழிப்பது கண்டு அவர் மனமழிந்தார். ஸ்காட்டோ தந்தை மனத்தைப் புண்படுத்தப்படா தென்றே வேண்டா வெறுப்பாகத் தம் தொழிலைச் செய்துவந்தார். தொழிலில் இறங்கி 5 ஆண்டுகளுக்குப் பின்னும் அவருக்கு அதில் ஆண்டு ஒன்றுக்கு 144 பொன் மட்டுமே ஊதியமாக வந்தன. இலக்கிய உலகில் வெற்றிகண்ட பின்னரே தொழிலிலும் அவருக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆயினும், அவருக்கு அத்தொழிலில் சற்றும் விருப்ப மில்லையாதலால் தந்தை இறந்தபின் அதனை விட்டு விட்டார். அப்பொழுதும் இலக்கியம் ஒன்றாலேயே பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாமல் வழக்கு மன்றத்தில் (Court of Session) எழுத்தாளராக அமர்ந்து ஆண்டுக்கு 1,300 பொன் பெற்றார். புனைகதை வெளியிடத் தொடங்கிய பின்தான்