ஆங்கிலப் புலவர் வரலாறு
163
அடுத்த தடவை தற்செயலாய் "மந்த்லீ மாக்ஸீன்” என்ற செய்தித் தாளை நோக்குகையில், தமது கதை புனை பெயருடன் அதில் காணப்படுவது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர்.
செய்தித்தாள் தமது கட்டுரையை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில், பொருள் கைம்மாறு கேட்கக்கூடச் செய்யாமல் 'பாஸ்' (Boz) என்ற புனை பெயருடன் பல கட்டுரைகள் எழுதி, அப்பெயருக்கு ஒரு நல்ல செல்வாக்கை ஏற்படுத்தி, அதன்பின் பொருள் திட்டம் வகுக்க முயன்றார். ஆனால், அந்தச் செய்தித்தாள் நன்னிலையிலில்லாததால் அதன் ஆசிரியர் தாம் பொருள் கொடுக்கும் நிலையிலில்லை என்று கூறிவிட்டார். ஆனால் அவர் பெயர் செல்வாக்குப் பெற்றுவிட்டமையால் சின்னாட்களில் தானே அவர் கட்டுரைக்கு அவர் கேட்ட தொகையிலும் பன்னிருமடங்கு தொகை அவருக்குக் கிட்டிற்று. "ஈவனிங் கிரானிக்கிள்” என்ற செய்தித்தாளுடன் அவர் உறவு வைத்துக்கொண்டு “பாஸின் கைவரிசைகள்” (Sketches of Boz) என்கிற சிறு கட்டுரைகளை அதன் மூலமாக வெளியிட்டார். 1836இல் இதனை இரண்டு பகுதிகளாகப் படங்களுடன் க்ஷரூக்ஷாங்க் என்பவரது உதவியுடன் வெளியிட்டு வெற்றியின் முதற்படியிலேறினார்
5. பிக்விக் பேப்பர்
இப்போது அவர் பிக்விக் பேப்பர் என்ற செய்தித் தாள் ஒன்றை வெளியிட்டார். விளம்பரத் திட்டம் ஏற்படாத அந்நாள், செய்தித்தாள் வளர்ச்சி மிகவும் பிற்போக்காகவே இருந்திருக்க முடியும்.ஆகவே, முதலில் பலவகையில் புதுமைவாய்ந்த “பிக்விக்”கைப் பொதுமக்கள் விரும்பி ஏற்க நாள் செல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே, அதற்கு ஏற்பட்ட விரைந்த வளர்ச்சியும் புகழும் உண்மையில் டிக்கன்ஸோ, அவருடைய வெளியீட்டாளரோ கனவிலுங் கூடக் கருதியிராதவை ஆகும். டிக்கன்ஸ் அவர்களிடமிருந்து திங்கள்தோறும் 15 பொன் பெறுவதாகத் திட்டஞ் செய்து எழுதிவந்தார். அதுவுங்கூட முதல் இரண்டு திங்கள் பணத்தை முன்கூட்டி வாங்க வேண்டிய அளவு வறுமை நிலையில் அவர் இருந்தார்.