பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

அப்பாத்துரையம் - 45

முதல் வெளியீட்டில் 400 படிகளே அச்சிடப்பட்டன. ஆனால், 5ஆம் வெளியீடு வெளிவர இருக்கையில் அவர்கட்கு மகிழ்ச்சியும் வியப்புந் தரத்தக்க, ஆனால் தற்காலிகமாக அவர்களுக்கு இக்கட்டு உண்டுபண்ணிய செய்தி ஒன்று நிகழ்ந்தது. அதில் வரையப்பட்டிருந்த ஸாம் வெல்லரின் முழு விவரங்களையும் அறியும் ஆவலினால் முதலில் அச்சிடப் பட்டதை விடப் பதின்மடங்கு படிகள் வேண்டிவந்தன. 15ஆம் வெளியீட்டில் 45,000 படிகள் விற்றன.டிக்கன்ஸின் செல்வாக்கும் புகழும் இப்போது வானளாவின. அவர் நூல் வெளியீட்டாளர் பெருஞ்செல்வந் திரட்டினார். ஆனால், அவருக்குச் செலுத்த வேண்டிய பணம் புகழ் வருமென எதிர்பாராத காலத்திட்டப்படி அமைந்ததாதலால் சிலநாள் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், இவ்விடையூறும் விரைவில் ஒழிந்தது. நிக்கோலஸ் நிக்கிள்பீ என்ற புனைகதையின்போது அதனை முடிக்கவேண்டி வந்த 20 திங்களிலும் திங்கள்தோறும் அவருக்கு 150 பொன் கிடைத்தனவாம்.

6. புனைகதை வெள்ளம்

பாஸின் கைவரிசைகள் 1835-36இலும், பிக்விக் பேப்பர்கள் 1837இலும் வெளியிடப்பட்டன. பின் ஆலிவர் டுவிஸ்டு 1838இலும், மேற்கூறப்பட்ட நிக்கோலஸ் நிக்கிள்பீ 1839இலும் பழம் பொருட் கடை (Old curiosity Shop) 1840-41இலும், மார்ட்டின் சஸ்ஸில்விட் 1844இலும், டாம்பி அண்டு சன் 1848இலும், ப்ளீக் ஹவுஸ் 1853இலும், பேர் ஆர்வங்கள் (Great Expectations) 1861இலும் வெளி வந்தன. அவரது மிகச் சிறந்த புனை கதையாகக் கருதப்படும் டேவிட் காப்பர்ஃபீல்டு 1880இல் எழுதப்பெற்றது. "இரு நகர்களின் கதை” என்னும் நூல், பிரெஞ்சுப் புரட்சியை ஒட்டி 1859இல் எழுதப்பெற்ற நெஞ்சை அள்ளும் துணிகரச் செய்திகள் அடங்கிய புனை கதை ஆகும்.

இவற்றைத் தவிர அவர் பல செய்தித்தாள்களுக்கு எழுதியும், பல செய்தித்தாள்களைத் தொடங்கி நடத்தியும் வந்தார். 1846இல் அவர் நாட் செய்திகள் (Daily News) என்ற செய்தித்தாளில் முதல் ஆசிரியர் ஆனார். வீட்டு மொழிகள் (House-hold Words) ஆண்டு முற்றும் (All the year round) என்ற