186
2. கல்லூரி வாழ்வு
அப்பாத்துரையம் - 45
டெனிஸன் கல்லூரிப் புலமைசான்ற கவிஞர் அல்லர். ஆயினும், அவரது கவிதை வாழ்க்கையை உருவாக்க அவருடைய கல்லூரி வாழ்க்கை பயன்பட்ட தென்பதில் ஐயமில்லை. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த அந்நாளைய பெரியாராகிய வேட்ஸ்வொர்த், கால்ரிட்ஜ் போன்ற கவிஞர்க ளுடனும், கார்லைல் போன்ற எழுத்தாளர்களுடனும், உரையாளர்க ளுடனும் அவர் ஊடாடினார். அவருடைய முற்காலக் கவிதைகளும் பெரும்பாலும் அந்நாளைய இளைஞரிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த கவிஞர் ஆகிய கீட்ஸையும் ஓரளவு ஷெல்லியையுமே பின்பற்றுபவையாயிருந்தன.
ஆல்ஃபிரெடும் சார்ல்ஸும் ஒருங்கே 1828ஆம் ஆண்டு பிப்ரவரி 20இல் கேம்ப்ரிட்ஜிலுள்ள மூவிறைக் கல்லூரியிற் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தமையனாரான பிரெடெரிக் அதே கல்லூரியில் சிறப்புவாய்ந்த மாணவராயிருந்துவந்தார்.அந்நாளில் அக்கல்லூரியில் இலக்கிய ஆராய்ச்சி யாளர் பலரும் அரசியலறிஞர் பலரும் பயின்று வந்தனர். அவர்களிடையே டெனிஸன் எளிதில் தலைவராக விளங்கினார். இதற்கு எல்லா வகையிலும் அவர் தகுதியானவராகவே இருந்தார். அவர் வீறும் பெருமிதமு மிக்க தோற்றமுடையவர். ஆறு அடி உயரமும், அகன்ற மார்பும், உரமிக்க நீண்ட கால் கைகளும், ஷேக்ஸ்பியர் முகமொத்த பரந்துயர்ந்த முகமும், ஆழ்ந்த கண்களும், கறுத்துச் சுருண்ட தலை மயிரும் கொண்ட அவர் தோற்றம் அவருக்கு ளைஞரிடையே முதன்மை தந்தது. அத்துடன் அவர் ஆடல் பாடல் விளையாட்டுக்களிலும் ஈடற்றவராய் விளங்கினார்.
மூவிறைக் கல்லூரியில் பிற்காலத்தில் ஆசிரியராய் விளங்கிய தாம்ப்ஸன் என்பவர் டெனிஸனை முதன் முதலில் பார்த்தபோதே 'அவர் பெருங் கவிஞராவார்' என்று கண்டு கொண்டதாகக் கூறினராம். "தோட்டக் காரன் மகள்" என்ற பாடலில் இராப்பாடிப் பறவை(Nightingale)யின் கண்களில் நிலவொளியின் சாயலைக் கண்டதாக ஒரு குறிப்புக் காணப் படுகிறது. இது பள்ளி நாட்களில் அவர் உண்மையிலேயே பள்ளியை அடுத்த சோலைகளில் கண்ட காட்சி என் று தெரிகிறது. இக்கருத்து தவறன்று என்பதை அவர் எழுதிய