ஆங்கிலப் புலவர் வரலாறு
189
அதன் மயக்கத்தால் தளர்ச்சியடைந்து மயங்கிக் கிடந்த அவர்கள் உடலின் ஒவ்வோருறுப்பும் பூம்பந்தரின் நிழலிலே குளிர்ந்த ஓடைய யின் பாங்கரிலே செயலற்றுக்கிடந்து ஓய்வின் இன்பம் துய்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் தாம் செயலற்ற இன்பத்தை நுகர்வதுடன் நில்லாது யுலிஸிஸையும் அவன் தோழர்களையும் உடன்வந்து அதே இன்பம் நுகருமாறு அழைத்தனர். யுலிஸிஸ் அச்சோம்பல் வாழ்வை ஏற்கத் தயங்குவது கண்டு அவர்கள் அவனுடன் செயலற்ற வாழ்வே மேம்பட்டதென மாயாவி வேதாந்தம் பேசி வாதிட்டனர்.
இவ்வேதாந்தத்துக்கு நேர்மாறான நிலையிலுள்ளது ‘யுலிஸிஸ்' என்ற கவிதை. இங்கே யுலிஸிஸ் தன் வாழ்வு முற்றிலும் வெற்றிகளும் அருஞ் செயல்களுமாற்றி, இறுதியில் தன் நாட்டில் வந்து நெடுநாள் தன் இயல்புகளை எல்லாம் அடக்கிக்கொண்டு அமைதியாக ஆட்சிபுரிந்தான். ஆனால், அம்முதுமையிலும் அவனால் அகநிறைவு கொண்ட அச்சிறு மக்களிடையே வாழ முடியவில்லை. ஆகவே, அவன் விரைவில் தன் மகனுக்கு முடிசூட்டுவித்து அவனே அவர்களை ஆளும்படி விட்டுவிட்டு முடிவற்ற செயல் நிறைந்த தன் குறிக்கோள் வாழ்க்கைக்குச் செல்ல முயன்றான். முயன்று அவன் ஓய்வற்ற அம்முயற்சியில் தன் பித்துடன் பங்குகொண்ட பித்தர்களாகிய தன் தோழரை அழைத்தான்.
பொதுப்படையான மக்கள் வாழ்க்கையின் சிறுமையை யுலிஸிஸ் வாழ்க்கையின் மட்டற்ற உயர்வுடன் ஒப்பிட்டுக்காட்டி டெனிஸன் யுலிஸிஸின் பெருமிதத்தையும், ஈடும் எடுப்பும் அற்ற உயர்நிலையையும் நமக்கு விளக்குகிறார்.
டெனிஸனின் மாய உலகின் இன்னுமோர் அரிய படைப்பு 'ஷாலெட் சீமாட்டி' என்பது. மந்திரம் என்று ஒன்று உண்டென நம்பு பவருமுண்டு; நம்பாதவருமுண்டு. ஆனால், டெனிஸன் தன் கவிதையின் தொடக்கத்திலேயே நம் கண்முன் மந்திரத்தால் கட்டுண்ட ஓர் உலகைக் காட்டுகிறார். அவருடைய உலகைவிட்டு வெளி வரும்வரை நம் உலகின் பகுத்தறிவு வாதத்தை நாம் மறந்து அம் மந்திர உலகையே இயற்கை என ஏற்றுக் கொள்பவர் ஆகிறோம். ஆனால், அத்தகைய மந்திர உலகினிடையே வாழும் மந்திரத் தலைவியாகிய ஷாலட் சீமாட்டியிடம் எப்படியோ நம்