(202
அப்பாத்துரையம் - 45
இருவகை இலக்கியங்களிலும், மில்ட்டனின் கவிதையிலும் கூட, காதலும் திணைக்கு உரிமைப்படும்படி கூறப்படவில்லை. டெனிஸன் நூலில் காதலரும் காதற்கதையும் திணை வாழ்வை முற்றிலும் படம் பிடிக்கும் முறையில் வரையப்பட்டுள்ளன.
இதே காலத்தில்தான் ‘பூ’, ‘அலக்ஸான்ட்ரா அரசியின் வரவேற்புப்பா' ஆகியவையும் 'வடநாட்டுழவன்' (பழைய நடை), ‘வடநாட்டுழவன்' (புதிய நடை)-ஆகிய பல்வேறு வகைப் பாக்கள் எழுதப்பட்டன. மேற் குறிப்பிட்ட படி ‘அலக்ஸான்ட்ரா அரசி’ அரசியல் சிறப்புடையதாயினும், நாட்டு மக்கள் உள்ளத்திலும் நாட்டார்வம், பெருமிதம் ஆகிய உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்புவதாகும்.
'வடநாட்டுழவன்' எல்லைப்புற உழவர் வாழ்க்கையுடன் அவர்கள் பேச்சையும் படம் பிடிப்பது.
1876 முதல் 1892 வரை டெனிஸன் கருத்து நாடகத்தில் சென்றது. ஷேக்ஸ்பியர், மார்லோ ஆகியவர்களைப்போல ஆங்கில வரலாற்றை நாடக உருவில் தர அவர் முயன்றார். ஹாரால்டு (1876), பெக்கெட் (1899), மேரி அரசி (1875) ஆகியவையும் 'காடுறைவோர் (Foresters 1892) என்பதும் இத்தகைய நாடகங்கள்.
இறுதிக்காலத்தில் டெனிஸன் பழையபடி வாழ்க்கைத் தொடக்கத்தில் எழுதியதுபோன்ற சிறு பாக்களும் பாடல்களும் எழுத முனைந்தார். 1880இல் 'பழம் பாடல்கள், 'டிரிஸியாஸ்', ‘டெமிட்டர்', ‘ஈனானின் இறுதி' ஆகியவை எழுதப்பட்டன. பழம்பாடல்களில் இரண்டாவதாக 'லாக்ஸ்லி ஹால்' என்ற இன்னொரு பாடலும் 'ரிவெஞ்ச்' என்ற கடற்போர் பற்றிய நாட்டார்வ மூட்டும் சிறு பாடலும் 'லக்னோவின் பாதுகாப்பு' ‘ஆக்பர் கனவு' ‘முதற்பூசல்' ஆகிய பலவும் அடங்கியுள்ளன. ‘ஆக்பரின் கனவு' சமய ஒற்றுமை நாடி வட இந்தியப் பேரரசர் ஆக்பர் அமைத்த பல் சமய மண்டலத்தைப் பற்றியது. 'ஈனான்’ ‘ஈனக் ஆர்டன்' போன்று எளிய வாழ்க்கையில் ஏற்படும் துயர்களின் உருக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
டெனிஸன் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் செய்திகள் மிகச் சில. அவையும் பொதுமைச் சிறப்புடையவையேயன்றிப் பிற