2. முழுமுதலுரிமையும் சட்ட திட்டங்களும்
சமூகத்தின் முழுமுதலுரிமை அதன் உறுப்பினரின் மொத்த உரிமையே - பெரும்பான்மை உரிமை கூட அல்ல! பெரும்பான்மை அதன் ஏகதேச நிலை மட்டுமே அதனை மனமார விரும்பும் உறுப்பினரே, அதனை மனமாரப் பின்பற்றி ஒத்துழைப்பர். மனமார விரும்பாதவரும் இணங்கியாக வேண்டும். இது ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கூறு. ஆனால் மனமில்லாத இந்த ணக்கம் தற்காலிகமானதாக, மிகுதி வளராததாக இருந்தாக வேண்டும். ஏனெனில் அது நீடிக்குந்தோறும், பெருகுந்தோறும் சமூகக் கட்டுப்பாடு தளரும். சமூக வலுக்குறையும். இன்னொரு வகையாகச் சொல்வதானால், சமூகத்தில் மிகப் பெரும்பாலாரும்- கூடுமானால் அனைவரும் - மனமார விரும்பி ஏற்கும் பண்புகளே சமூகத்தை வலுப்படுத்தும் அடிப்படைப் பண்புகள் ஆகும்.
மனமார விரும்பி ஒத்துழைத்தல் சமூக உரிமையின் உயர் நிலைப் பண்பு. மனமார விரும்பாமல் இணங்குதல், அதன் நடுத்தரப் பண்பு. வெறுத்துக் கீழ்ப்படிதல் இருக்கக்கூடாத இழிநிலைப் பண்பு. மூன்றாவது பண்பு மிகுந்தோறும் சமூகம் அழிவை நோக்கிச் செல்லும். பலர் ஆதிக்கம், சிலர் ஆதிக்கம், ஒருவர் ஆதிக்கம் ஆகிய மூன்றும் இக்கீழ்ப்படிதற் பண்பைப் பெருக்கும் படிகள்! அவை சமூகத்தின் உயிர்ப் பண்பைக் குலைப்பவை. ஆகவே சமூகத்தின் முழுமுதல் உரிமை சமூகத்தில் ஒருவரிடமோ, சிலரிடமோ, பலரிடமோ கூடத் தங்கக் கூடாது. முழுமுதல் அதாவது மொத்தச் சமூகத்தின் உரிமையாகவே இருந்து தீரவேண்டும்.
இவ்வுரிமை பங்கிட்டுத் தரத்தக்கதுமல்ல. பகிரக்கூடியது மல்ல. ஆயிரத்தில் ஒன்று குறைந்தால், ஆயிரமல்ல. அதுபோல, முழுமுதலில் ஒரு சிறிது குறைந்தால் கூட, அது முழுமுதலுரிமை
யல்ல.