பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. அரசியலும் சமயமும்

மனிதர் தம்முள் ஒரு மனிதரைத் தலைவராக ஏற்குமுன், கண்காணாத் தெய்வங்களையே தலைவராகக் கொண்டு பின்பற்றினர். மன்னர் அல்லது குலபதிகளினிடத்தில் குல தெய்வங்களும், அரசியலினிடத்தில் வழிபாட்டு வினை முறைகளும் இருந்தன. ஒவ்வொரு அரசியல் சமூகத்துக்கும் ஒரு தெய்வம் இருந்தது. மக்கள் போரிட்டபோது, அவர்கள் சார்பில் தெய்வங்களும் போரிட்டன. ஆனால் வெற்றி தோல்விகளுக்குப் பின் சில சமயம் ஒரு தெய்வம் அழிந்தது; சிலசமயம் ஒரு தெய்வம் தலைமை நிலைக்கு உயர்ந்து அடுத்த தெய்வம் அதற்கு அடிமை ஆயிற்று. சில சமயம் இருதெய்வங்களும் ஒரு தெய்வமாக்கப் பட்டன. ஒரு தெய்வம் ஆணாகவும், மற்றது பெண்ணாகவு மிருந்தால் அவை கணவன் மனைவியாவது கூட உண்டு. கிரேக்கரிடையே வெளியார் தெய்வங்களைத் தம் தெய்வங் களாகக் கருதும் பண்பை மிகுதியாகக் காண்கிறோம். உரோமர் காலத்தில் தோற்றவர் தெய்வங்கள், வென்றவர்களால் மேற்கொள்ளப்பட்டு, பேரரசின் எல்லா மக்கள் தெய்வப் பட்டியல்களும் ஒன்றுபட்டன. உரோம தெய்வங்களின் பட்டியலும் உரோம அரசுபோல உலகளாவின; உரோம சமயமும் அரசியலும் இரண்டுமே பேரரசுகளாக இயங்கின.

தெய்வ வழிபாடு ஒரு அரசியல் வழிபாடாயிருந்த காலத்தை விவிலிய நூலிலே காண்கிறோம். 'அம்மன்' நாட்டவரைப் பார்த்து 'ஜெப்தா' “உங்கள் தெய்வம் சாமாஸ். அவர் உடைமைகள் ஒழுங்குமுறைப்படி உங்கள் உரிமையே அல்லவா? அதுபோலவே அதே உரிமையால், எங்கள் உரிமையும், எங்கள் வெற்றித் தெய்வம் வென்று பெற்ற நிலங்களும் எங்களையே சாரவேண்டு மல்லவா?” என்று கூறுவது காண்க.