பக்கம்:அமர வேதனை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிள்ளையார் சுழி

நான் 1942 முதல் 'வசன கவிதை' எழுதலானேன்.

அந்நாட்களில் 'மறுமலர்ச்சி இலக்கிய இரட்டையர்' ஆக விளங்கிய (ந.பிச்சமூர்த்தி) 'பிஷூ'வும், கு.ப.ரா வும் எழுதிக் கொண்டிருந்த கவிதைகளே என்னையும் அம்முயற்சியில் உற்சாகமாக ஈடுபட வைத்தன.

பத்திரிகை உலகில் இடம் பெற 1943 ல் எனக்கு வசதி செய்து வந்த 'சினிமா உலகம்' (மாதம் இரு முறை) 'நவசக்தி' (இலக்கிய மாசிகை) எனது கவிதை வளர்ச்சிக்கு துணை புரிந்தன. பின்னர் 'கிராம ஊழியன்’ (இலக்கிய மாதம் இருமுறை) எனது இலக்கிய விளையாடல்களுக்கு ஏற்ற நல்ல அரங்கமாக அமைந்தது - 1944 முதல் 1947 முற்பாதி முடிய.

'கிராம ஊழியன்' நின்று விட்ட பிறகும் நான் கவிதைகள் எழுதிக்கொண்டு தான் இருந்தேன். என் கவிதைகளை விரும்பிப் பிரசுரித்த பத்திரிகைகளும் இருந்தன.

அப்படி நான் எழுதிய கவிதைகளில் 1960 க்குப் பிற்பட்ட படைப்புக்களே இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

'ஒரு சிறு தொகுப்புக்காக' எனது கவிதைகளே, 1973 ல் ஆரம்பித்து பின்னோக்கி தேர்ந்தெடுக்கையில், போதுமானவை இக்காலகட்டப் படைப்புகளிலேயே அடங்கி விட்டது தான் காரணமே தவிர, இதற்கு வேறு முக்கிய காரணம் எதுவும் இல்லை.

இக்கவிதைகளில் பெரும்பாலானவை 'தன்னகநோக்கு' உடையவை. 'சமுதாயப் பார்வை' கொண்டவைக்கும் குறைவில்லை! ஆனால் எனது எல்லா நோக்குகளுமே கோணல், குதர்க்கம், கோளாறு ஆனவை என்று இளைய தலைமுறைக் கவிஞர்களும் ரசிகர்களும் சொல்லக் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/9&oldid=1278914" இலிருந்து மீள்விக்கப்பட்டது