பக்கம்:அமுதும் தேனும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

10



கண்ணுறக்கம் இலாதவனாய் நீண்ட நேரம்
கட்டிலின்மீ தமர்ந்திருந்த சட்ட நாதன்
"பெண்மயிலே இங்கேவா" என்ற ழைத்தான்.
பேரழகி அவனருகில் வந்து நின்றாள்.
"எண்ணெய்விளக் கேற்றிவைத்தால் அணையக் கூடும்
என்பதனால் இதோஇந்த நீல வானம்.
வெண்ணெய்விளக் கேற்றுவதைப் பாராய்” என்று
வெண்ணிலவை அவன்சுட்டிக் காட்ட லானான்.


ஆரமுதில் உருவான நிலவை ஆங்கே
அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி,
"ஊரில் சிலர் உறங்காமல் இருப்ப தற்கும்
ஓவியமே நாமுறங்கா திருப்ப தற்கும்
காரணந்தான் ஏதேனும் உண்டோ?” என்றான்.
"காரணமுண் டதைச்சொல்ல மாட்டேன்" என்றாள்.
"நேரிழைநீ காரணத்தைச் சொல்ல வேண்டாம்"
நின்விழிகள் சொல்லட்டும் இப்போ தென்றான்.


"கண்சொன்னால் வாய்வருத்தப் படுமே" என்றாள்
"காக்கவைத்தால் நான் வருத்தப்படேனோ" என்றான்.
"எண்ணத்தை உணர்ச்சியிடம் ஒப்ப டைத்தால்
இந்நிலைதான் உருவாகும். இங்கே உங்கள்
விண்ணப்பம் நிறைவேற வேண்டு மாயின்
விடியும்வரை காத்திருக்க வேண்டும்" என்றாள்.
"தண்ணீரின் சாயலிலே தங்கி வந்த
தாமரையே தாமதம்செய் யாதே" என்றான்.