பக்கம்:அமுதும் தேனும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

12


பூவையென்னும் பெயர்கொண்ட காயாம் பூவே!
பூங்கொடியே மலர்சூடி மகிழும் பெண்ணே!
சேவலின்தீக் குடுமியெனும் பூவைக் கொய்து
செறிகுழலில் நீசூடிக் கொண்டா லென்ன?
காவியென்னும் கருங்குவளை மலர்மட் டுந்தான்
கருங்குழலுக் கெழில்தருமோ? என்றான் வள்ளல்.
"மாவெடுத்துப் பணியாரம் சுடுவா ரன்றி
மண்ணெடுத்துச் சுடுவாரோ?" என்றாள் மங்கை.

கூரம்பு விழிகாட்டி வாட்டும் மாதே!
குற்றாலம் போய்வருவோம்; குற்றா லத்தில்
வீரத்தை நினைவூட்டும் மலையின் உச்சி
மீதிருந்து வழிந்தபடி இருக்கும் தண்ணீர்,
தூரத்துப் பார்வைக்குப் பாம்பின் சட்டை
தொங்குவது போன்றிருக்கும் அருவி நீரின்
ஈரத்தைத் தேன்துளிகள் ஈர மாக்கும்.
இலைநிறைந்த பலாமரங்கள் அழகு சேர்க்கும்.

குளிர்தூங்கு குற்றாலம் எனினும் ஆங்கே
குரங்குகளும் மரக்கிளையில் இரவில் தூங்கும்:
தளிர்தூங்கும், அத்தளிரில் பனிநீர் தூங்கும்:
சண்பகப்பூ உதிர்ந்தாங்கே தரையில் தூங்கும்;
இளங்காற்று மாலைவரும் வரையில் தூங்கும்:
எண்ணற்ற மூலிகைகள் சேர்ந்து தூங்கும்;
தளராத மாமலையின் சிகரம் தன்னில்
தழும்புநிலா படுத்தபடி காற்று வாங்கும்.