பக்கம்:அமுதும் தேனும்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கவிஞர் சுரதா




ஆற்றோசை திருச்சியிலே கேட்கும்; முந்நீர்
அலையோசை நாகையிலே கேட்கும்; தென்னங்
கீற்றோசை சோழவந்தான் தன்னில் கேட்கும்;
கிண்கிணியின் ஓசையுன்றன் காலில் கேட்கும்;
ஊற்றோசை தேரழுந்தூர் தன்னில் கேட்கும்;
ஒழுகரைசண் முகக்கவிஞன். பாடி வைத்த
ஏற்றப்பாட் டெனுமுழவுப் பாட்டின் ஓசை
எந்நாளும் குற்றாலம் தன்னில் கேட்கும்.

அண்ணாந்த படியிருக்கும் மலையின் ஒரம்
அழகுமயில் நாள்தோறும் நடனமாடும்.
எண்ணாத எண்ணமெலாம் குற்றா லத்தின்
எழிலதனைக் கண்டவுடன் தோன்றும், பெண்ணே!
கண்மீனின் பிரசவந்தான் அழுகை, பண்டைக்
கவிஞர்களின் அச்சந்தான் அவைய டக்கம்:
தண்ணீரின் தனிப்பிரிவே பொய்கை, ஆற்றுத்
தண்ணீரால் உருவான கைதான் வைகை.

"தொடுக்கின்ற கையே உன் மலர்க்கை; உன்னைத்
தொடுகின்ற கையதுவே என்கை” என்றான்.
"படைக்கின்ற கையதுவே என்கை; என்றன்
படம்வரையும் கையுங்கள் கைகள்" என்றாள்.
"பிடிக்கின்ற கையதுவே என்கை; அன்பால்
பிணைக்கின்ற கையதுவே உன்கை" என்றான்.
"எடுக்கின்ற கையதுவே என்கை; அள்ளி
எல்லோர்க்கும் வழங்கும்கை உங்கள் செங்கை".