பக்கம்:அமுதும் தேனும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

14


பேர்வாய்ந்த இரட்டையரை ஆத ரித்துப்
பெருங்கீர்த்தி பெற்றானாம் சம்ப ராயன்.
ஊர்வாழ, உலகத்தில் உள்ளோர் வாழ,
ஒப்பற்ற தமிழ்ப்புலவர் குடும்பம் வாழக்
கார்மேகம் வழங்குதல்போல் வழங்கும் தங்கள்
கரம்வாழ்க! என்றுரைத்தாள். அதனைக் கேட்டு,
நீர்நாண நெய்வழங்கும் ஊரில் தோன்றி
நிலம் நாணப் புகழ்பெற்றோன் மகிழ்ச்சி யுற்றான்.

சட்டிநாத பிள்ளைகளாம் பிச்சைக் காரர்
சத்திரத்தில் கதைபேசிக் கொண் டிருக்கக்
கட்டிலுக்குப் பக்கத்தில் சட்ட நாதன்
காரிகையோ டுரையாடிக் கொண்டி ருக்கக்
கொட்டிவைத்த செம்பொன்னை அள்ளி அள்ளிக்
கொடுத்தவனாம் அவ்வள்ளல் இல்லம் நோக்கி
வட்டளத்தூர் ஏருழவன் விரைந்து வந்து
வாசலிலே நின்றபடி "ஐயா!" என்றான்.

சீருடையோன், சிறப்புடையோன், எதையும் நன்கு
சிந்திக்கும் திறனுடையோன், நிழலைத் தேடும்
நீருடையோன் நிலமுடையோன், செம்பொன் மேனி
நிறமுடையோன் புகழ்த்துணைவன் இவனே என்னும்
பேருடையோன் விரைந்தாங்கே வெளியில் வந்தான்.
பெரியோனைக் கண்டவுடன் அன்னோன் காலில்
ஏருழவன் வீழ்ந்தெழுந்தான். அவனை நோக்கி
“எதற்கு வந்தாய் சொல்லப்பா?" என்றான் வள்ளல்.