பக்கம்:அமுதும் தேனும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

24


செங்கதிரெப் போதுதிக்கும் கிழக்கே என்று
சேவலொன்று தன்மூக்கைத் தரையில் ஊன்றி
அங்கதுவே நினைவாக இரவுப் போதில்
அப்படியே இருப்பதுபோல் அவனைக் காண
மங்கையவள் அரண்மணையில் காத்தி ருந்தாள்.
மனத்துக்கண் மாசில்லான் வந்து சேர்ந்தான்.
இங்கிருந்தால் இடையூறு வருமென் றெண்ணி
இளையவனை வேறிடத்திற் கழைத்துச் சென்றாள்.

சென்றவுடன் ஆங்கவனோர் புறத்தில் நின்றான்
சிற்றிடையாள் அவனருகே வந்து நின்றாள்.
வென்றுவென்று பெரும்புகழைச் சேர்க்கும் வேந்தர்
வெண்கொற்றக் குடைபோன்ற நிலவை நோக்கி
நன்றிசொல்ல வேண்டுமிந்த நிலவுக் கென்றாள்.
நாற்கவியும் பாடவல்லோன் அவளை நோக்கிக்
குன்றுதொடும் வெண்ணிலவில் உலக மக்கள்
குடியேறும் நாள்வரினும் வரலா மென்றான்.

மூடுபனி விதவையவள் அவனை நோக்கி
முழுநிலவை அடிக்கடி நான் பார்ப்பேன் என்றாள்.
ஆடுமயில், பாடுகுயில் இவற்றை நீங்கள்
அன்றாடம் பார்ப்பதுபோல்; சிறந்த செய்யுள்
ஏடுகளை அவ்வாறு தாங்கள் பார்த்தால்
இலக்கியங்கள் உருவாகும் அவ்வப் போது
நாடுநகர் எல்லைமுத லான வற்றை
நாடாள்வோர் பார்வையிட்டால் குறைகள் தீரும்.