பக்கம்:அமுதும் தேனும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

கவிஞர் சுரதா



திருச்சியிலே நெல்விளைச்சல் அதிகம்; கம்பர்
செய்யுளிலே சொல்விளைச்சல் அதிகம் என்றாள்.
திருச்சியிலே ஆலயங்கள் அதிகம்; அப்பர்
தேவாரம் நான்விரும்பும் பதிகம் என்றான்.
திருச்சியில்ராப் பள்ளிகளும் அதிகம், மன்னன்
சேதுபதி தொல்லைகளும் அதிக மென்றாள்.
உருள்பெருந்தேர்க் கச்சாணி போன்ற வீரர்
உள்ளவரை நமக்கச்ச மில்லை என்றான்.

ஆசைக்கோர் அளவில்லை என்றாள். ஆமாம்
அரசர்களும் அமைச்சர்களும் இதனை நன்கு
யோசிக்க வேண்டுமென்று துறவி சொன்னான்.
யோகியரே எனினும்தாம் பிறந்த நாட்டை
நேசிக்க வேண்டுமென்றாள். என்னிடத்தில்
நீசிக்க வேண்டுமென நினைப்பார் தம்மைத்
தூசிக்க வேண்டுமென்றான். இதுபோல் சொல்லித்
தோற்றவர்கள் இந்நாட்டில் பலருண் டென்றாள்.

இங்கிருந்து பார்த்தாலே திருவர ங்கத்
தெம்பெருமாள் திருக்கோயில் தெரியு மென்றாள்.
இங்கிருந்து பார்ப்பவர்க்கு மட்டுந் தானே
எம்பெருமாள் திருக்கோயில் தெரியும். ஆனால்
எங்கிருந்து பார்த்தாலும் நீல வானம்
எல்லோர்க்கும் நன்றாகத் தெரியு மென்றான்.
அங்கிருக்கும் முழுநிலவைப் பாரீர் என்றாள்.
அடிக்கடிநான் அதைப்பார்ப்ப தில்லை என்றான்.