பக்கம்:அமுதும் தேனும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

கவிஞர் சுரதா




அம்மைநோய் கண்டதனால் மன்னர் மாண்டார்.
அந்நோயால் பலர்நமது நாட்டில் மாண்டார்.
நம்நாட்டில் இனிஇந்நோய் பரவா வண்ணம்
நாமிதனைத் தடுத்தாக வேண்டு மென்றான்.
அம்மைநோய் மிகக்கொடிய நோயென் றாலும்
அதனைவிட நம்நாட்டில் கொடிய தான
கைம்மைநோ யுற்றிங்கு வருந்தும் பெண்டிர்
கடைத்தேற ஏதேனும் வழிசொல் லுங்கள்.

பொருள்விலகி இருக்குமெனில் வறுமை வந்து
புகுந்துவிடும் என்பதுண்மை; காலில் உள்ள
விரல்விலகி இருக்குமெனில் விதவை யாகி
விடுவாளென் றுரைப்புதைநான் ஏற்க மாட்டேன்
அருள்விலகிப் போய்விடினும் மீண்டும் வாழ்வில்
அதைப்பெறலாம் என்கின்றார்; விதவைக் கிங்கே
இருள்விலக வழியில்லை ஆண்கள் மட்டும்
இதற்கு விதிவிலக்காக வாழ்கின் றார்கள்.

அக்காலப் பெண்ணொருத்தி விதவை யாயின்
அவ்விதவை புல்லரிசி சமைத்துண் பாளாம்;
பக்கத்தில் பாயிருந்தும் தரையின் மீதே
பாவையவள் படுப்பாளாம்; விதவை என்ன
வைக்கோலா? பயனற்ற புகையா? தண்ணீர்
வற்றிப்போய் விட்டதொரு குளமா? வீட்டில்
தக்கோலம் அவ்விதவை தின்றாள் என்ன?
சாதத்தில் நெய்யூற்றிக் கொண்டா லென்ன?