பக்கம்:அமுதும் தேனும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

34



முன்பக்கம் மூக்குத்திப் பூக்கள், வண்டின்
முதலிரவை மறைந்திருந்து பார்க்கும் ஈக்கள்,
பின்பக்கம் மலைச்சாரல் மயிலின் ஆட்டம்,
பிறவியிலே கண்சிவந்த குயிலின் கூட்டம்,
என்தலைக்கு மேல்நெருப்பு நிலவின் ஒட்டம்,
இளந்தென்றல் ஓடிவந்து செயுமார்ப் பாட்டம்,
என்செய்வேன் இவையனைத்தும் ஒன்று கூடி
எனையெதிர்த்தால் இளம்விதவை என்ன செய்வேன்?

பாடாத குயிலுக்கு மகிழ்ச்சி யுண்டோ?
படராத பூங்கொடிக்கு வளர்ச்சி யுண்டோ?
ஓடாத நீருக்கு வேக முண்டோ?
உலவாத தென்றலுக்கு வரவேற் புண்டோ?
சூடாத மலருக்குப் பெருமை யுண்டோ?
துள்ளாத மீனுக்கு வாழ்க்கை உண்டோ?
தேடாத பொருளுக்கும். ஆணும் பெண்ணும்
சேராத வாழ்வுக்கும் வளர்ச்சி யுண்டோ?

நதிச்சார்பே இல்லாத நாட்டை யாரும்
நலங்கொழிக்கும் நாடென்று சொல்வ தில்லை.
விதைச்சார்பே இல்லாமல்மரங்கள் தோன்றி
விடுவதில்லை. இவ்வுலகில் யாரும் ஆண்பெண்
சதைச்சார்பே இல்லாமல் பிறப்ப தில்லை.
சயனசுகம் முனிவரையும் விடுவ தில்லை.
கதைச்சார்பும் கற்பனையும் துணையு மின்றிக்
காவியங்கள் உருவாக வழியே இல்லை!