பக்கம்:அமுதும் தேனும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

60



தன்மகளும் அன்னவனும் தோட்டம் தன்னில்
சந்தித்துப் பழகுவதை ஒற்றர் மூலம்
அன்றிரவு மொகலாயச் சக்ர வர்த்தி
ஒளரங்க சீப்பென்பான் கேள்விப் பட்டுப்
பொன்னுக்கும் பித்தளைக்கும் உறவா? வேங்கைப்
புலிநகமும் எலிநகமும் ஒன்றா? நான்போய்
இன்றிரவே இதற்கிங்கோர் முற்றுப் புள்ளி
இடவேண்டும் என்றெண்ணிக் கொண்டெ ழுந்தான்.

ஆத்திரத்தோ டவ்விடத்தை விட்டெ ழுந்தோன்
அரண்மனைப்பூந் தோட்டத்தை நோக்கி வந்தான்.
பூத்தமலர் விழிமாதும் அவனும் ஆங்கே
புவியாள்வோன் வரக்கண்டு திகைக்க லானார்.
வார்த்தசிலை போன்றவளோ, அருகில் மன்னன்
வருவதற்குள் தோட்டத்தில் இருந்த வெந்நீர்ப்
பாத்திரத்துள் காதலனை மறைக்க லுற்றாள்.
பாராள்வோன் ஆங்கதனைப் பார்த்து விட்டான்.

ஏனிங்கே நீவந்தாய்? எதற்கு வந்தாய்?
இங்கென்ன வேலையுனக் கென்று கேட்டான்.
மானிங்கே வந்திருக்கும் என்று வந்தேன்
மன்னவனே என்றுரைத்தாள். வெந்நீர் வைக்கும்
ஏனத்தில் வேறெதுவும் உளதோ? என்றான்.
இல்லையப்பா! வேறெதுவும் இல்லை என்றாள்.
நானிங்கே குளித்தாக வேண்டும்; நீரை
நன்றாகச் சூடேற்று விரைவில் என்றான்.