பக்கம்:அமுதும் தேனும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

64


ஆற்றோரம் அவன்வீடாம்; அந்த வீட்டில்
அவனோடு விவாதித்தோர் தம்மை யெல்லாம்,
காற்புள்ளி அரைப்புள்ளி யாக்கிக் கீழே
கவிழ்த்தகுடம் போலாக்கிக் காட்டி வந்தோன்.
மேற்கிலுள்ள கருங்கடலை ஒவ்வோர் நாளும்
மேற்பார்வை இடுகின்ற கதிரோன் போன்றோன்.
நூற்றாண்டால் மட்டுந்தான் பிந்திக் கொண்டான்.
நூதனத்தால் அவன்பலரை முந்திக் கொண்டான்.

தாய்மொழியோ அவனுக்குத் தெலுங்கென் றாலும்
தலைசிறந்த பாரசிக மொழியும், சொன்னால்
வாய்மணக்கும் தமிழ்மொழியும் அறிவான். மற்றும்
வடமொழியும் பிறமொழியும் அறிவான். நீயேன்
ஒய்வெடுத்துக் கொள்ளாமல் சுற்று கின்றாய்
உறங்கியெழக் கூடாதோ? என்று கேட்டால்,
பாய்விரித்துச் சூரியனா படுக்கும்? சுற்றும்
பம்பரமா அசையாமல் இருக்குமென்பான்.

மரணமிலாப் பெருவாழ்வும் புகழும் பெற்ற
மகாகவியாம் அக்கவிஞன், குயில்கள் கூவும்
பருவமெனும் கோடையிலே ஓர்நாள், பாட்டுப்
பயணத்தை மேற்கொண்டு வடக்கே சென்றான்.
கருவிமழை போற்சிறந்தோன் 'இபதத் கானா'
கட்டத்தில் பேரரசர் அக்பர் முன்னால்,
அரியதொரு கவிபாடிப் பரிசு பெற்றான்.
ஆத்தானக் கவியென்னும் பதவி பெற்றான்.