பக்கம்:அமுதும் தேனும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

கவிஞர் சுரதா


என்றென்றும் பெரும்புகழுக் குரியோன்; கைவேல்
எடுத்தெறியும் மாமன்னன் அதனைக் கேட்டு,
நன்றுநன்று நானிதனை ஒப்பு கின்றேன்.
நகரட்டும் சதுரங்கக் காய்கள் என்றான்.
மன்னவனும் அன்னவனும் ஆட்டம் தன்னில்
மனம்பதித்து விளையாண்ட சிறிது நேரம்
சென்றபின்னர்த் தேர்வேந்தன் தண்ணீர் கேட்டான்.
சேடியவள் அறைநோக்கி ஒட லானாள்.

மீன்பள்ளி கொள்ளுகின்ற குளத்தில் பூத்து
விரிந்தமலர் போன்றிருந்த லவங்கி என்பாள்,
தான்பள்ளி கொள்ளுகின்ற மஞ்சம் தன்னில்
தனித்திருந்த சமயத்தில் தோழி வந்தாள்.
ஏன்வந்து நிற்கின்றாய் தோழி என்றாள்.
இளங்கொடியாள் விவரத்தைச் சொல்லக் கேட்டுக்
கூன்விழாப் புகழ்பெற்றோன் புதல்வி, தங்கக்
குடத்தினிலே நீரெடுத்துக் கொண்டு சென்றாள்.

பளிச்சென்றோர் அழகான வெளிச்சம், ஆங்கே
பாய்ந்துவரப் பாவேந்தன் நிமிர்ந்து பார்த்தான்.
விளக்கில்லை அவளிருந்தாள் வெளிச்ச மாக!
மின்னலில்லை அவளிடைதான் மின்னிற்றங்கே!
கிளிச்சந்த மொழியாளின் எழிலைக் கண்டு
கிறுகிறுத்தான். கிளர்ச்சியினால் உந்தப் பெற்றான்.
தளர்ந்தோடும் நதியின்நீர் கார்கா லத்தில்
தனிவேகம் பெறுவதுபோல் உணர்ச்சி பெற்றான்.