பக்கம்:அமுதும் தேனும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

கவிஞர் சுரதா


சீதையைநான் பார்த்ததில்லை, அவளைப் பற்றித்
தீட்டிவைத்த ஏட்டினைநான் படித்த துண்டு
காதுவரை போய்த்திரும்பும் பளிங்குப் பார்வை
காட்டுமிவள் அவள்தானோ? பருவம் வந்தும்
தூதனுப்ப மறந்துவிட்ட மாதோ? விண்மீன்
தோரணமோ! எனக்கவிஞன் ஐய முற்று,
மாதர்க்குல மாமணியாம் அவளைப் பார்த்தான்.
மழைநீரின் கோடுகளை மன்னன் பார்த்தான்.

பெண்ணையவன் பார்க்கையிலே விண்ணைப் பார்த்தாள்.
பிழைத்திருத்தம் செய்வதற்கே வழியில் லாத
விண்ணையவன் பார்க்கையிலே மண்ணைப் பார்த்தாள்.
மேலுமவள் இழுக்கடித்தாள். புரிந்து கொண்டான்.
மண்பரவும் கிழங்குகளில் கருணை போன்றோன்
மறுபடியும் அவள்முகத்தைப் பார்க்கும் போது,
கண்ணையவன் கண்ணிலிட்டுக் கொண்டே செல்வாய்க்
கதவுகளை மெதுவாகத் திறக்க லானாள்.

தன்னியல்பு மாறாத பகுதி போன்று
தானிருந்தான் அக்கவிஞன் அதுநாள் மட்டும்.
அந்நிலையை மாற்றுகின்ற விகுதி போலும்
அவளிருந்த காரணத்தால் விகாரப் பட்டு
முன்னிருந்த நிலைமாறி வேறு பட்டான்.
முகத்தாலே நோய்செய்தாள்! துடிக்க லானான்.
மன்னவனோ தண்ணீரால் தாகம் தீர்த்தான்.
மணிவிழியால் புதுப்பாடம் தொடங்க லானார்.