பக்கம்:அமுதும் தேனும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

கவிஞர் சுரதா


முதற்காதல் நினைவுடைய கவிஞன், அந்த
மொகலாய மன்னவனைக் கூர்ந்து நோக்கிக்
குதித்தோடும் குதிரைகளோ, சிறந்த முத்துக்
குவியல்களோ செம்பொன்னோ வேண்டாம் வேந்தே!
புதுக்கோட்டை அரண்மனையில் வாழும் இந்தப்
பூவையெனும் பாவையைநான் அடைவே னாயின்
அதற்குப்பின் இனித்திடுமோ அமுதும் தேனும்?
அளிப்பதெனில் இவளையெனக் களிப்பீர் என்றான்.

தேர்வேந்தன் மகாகவியின் பேச்சைக் கேட்டுத்
திடுக்கிட்டான். அலைமோதும் நதிபோல் ஆனான்.
நேர்க்கோடு போன்ற மன்னன் தனது வாக்கை
நிறைவேற்றும் எண்ணத்தோ டவனை நோக்கி;
ஓர்வார்த்தை பாவலனே! இதனைச் சற்றே
உற்றுக்கேள்! இப்போது நீயென் னோடு
சேர்ந்துண்டால் சேயிழையைப் பெறலாம் என்றான்.
தேன்கவிஞன் ஆங்கதனை ஏற்றுக் கொண்டான்.

ஆயிரத்தைந் நூற்றுநாற் பத்தி ரண்டாம்
ஆண்டதனில் பிறந்தவராம் அக்ப ரோடு,
சேயிழையாம் அன்னவளை அடைய வேண்டிச்
சேர்ந்துண்டான். அப்போதக் கவிஞ னுக்கோ
தீயினது தத்துவமாம் பசியே இல்லை!
செந்தேனும் அவன்நாவுக் கினிக்க வில்லை
ஆயகலை வாணனுக்கோ அந்நே ரத்தில்
அறுசுவையில் ஒருசுவையும் தெரியவில்லை.