பக்கம்:அமுதும் தேனும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னனும் மண்சட்டியும்




ஆரம்ப காலத்தில் அவனோர் மூர்க்கன்;
அதற்குப்பின் அன்னவனோர் சூழ்ச்சிக் காரன்;
ஓரம்போ ஓரம்போ என்று தன்னை
ஒதுக்கிவைத்தோர் தமையெல்லாம் ஒழித்துவந்தோன்.
வீரத்தால் ஒருலட்சம் பேரைக் கொன்ற
வெறிவேந்தன், பின்னரவன் புத்த பக்தன்.
காரணத்தால் அவன்துறவி; அவன்யார் என்றால்,
காலத்தின் மேல்நீந்தும் அசோக மன்னன்.

வீரத்தை நிலைநாட்டித் தமிழ்ச்சங் கத்தில்
விவேகத்தைப் புலப்படுத்தி ஆட்சி செய்தோன்
ஆரியரின் படைகடந்த செழிய னாவான்.
அவனைப்போல் சிறந்தவனாம் அசோகன், நாட்டைப்
பேரனிடம் ஒப்படைத்து விட்டுப் புத்த
பிட்சாகி உபதேசம் செய்து வந்தான்.
ஈரத்தை நதிநீரில் முன்பு கண்டோன்,
இரக்கத்தில் அதனையவன் பின்பு கண்டான்.