பக்கம்:அமுதும் தேனும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

கவிஞர் சுரதா


அழுக்குருண்டை உலகத்தில் நாமெல்லோரும்
அவசரமாய்ப் பிறந்துவிட்டோம்; அதனால் கெட்டோம்.
வழுக்கிவிழா திருந்தாலும் மரணம் வந்தால்
வாழ்க்கைவிழா திருப்பதுண்டோ? இருப்ப தில்லை.
விழித்துவிழித் திமைத்தாலும் வெளிச்ச மின்றேல்
விழித்தவிழி தான்கலங்கும். வாழ்வில் என்ன
கிழித்துவிடப் போகின்றோம்? ஒன்று மில்லை.
கிளிப்பேச்சு மனிதனுக்குச் சாவே மிச்சம்.

சுவரின்மேல் ஒட்டிக்கொண் டிருக்கும் வெள்ளைச்
சுண்ணாம்பைப் போன்றதுதான் பதவி யாகும்.
கவலையினால் நம்நினைவு நிமிர்வ தில்லை.
கவலையில்லா மனிதர்களும் உலகி லில்லை.
கவியென்பர், கலையென்பர், காத லென்பர்,
காதலைப்போல் பூதலத்தின் மீதில் இன்பச்
சுவையுண்டோ? என்றிடுவர். ஐயோ பாவம்!
சுரைக்கொடியின் பூக்களிலா வாசம் வீசும்?

என்றுரைத்தான் திடீரென்று துறவி யானோன்.
இவ்வாறு கூறிக்கொண் டிருக்கும் போது,
சின்னதொரு மண்சட்டி கொண்டு வந்து
தெளிவடைந்த வேந்தனிடம் ஒருவன் தந்தான்.
என்பேரன் கொடுத்தானா இதனை? என்றான்.
எதிர்நின்றோன் ஆம்என்றான். அதனைக் கேட்டோன்.
இன்றெனக்கோர் புதுமாற்றம் என்று கூறி
இச்சென்று சட்டியினை முத்தமிட்டான்.