பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்புகள்


அயோத்திதாசர் பற்றி தமிழ்த் தென்றல் திரு.வி.க.

"இராயப் பேட்டையில் அயோத்திதாஸ் பண்டிதர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த மருத்துவர். நூலாசிரியர்; தமிழ் நாட்டில் பௌத்தம் வளர்த்தவர். அப்பண்டிதரிடம் ஒற்றைத் தலை நோயர் வரும் போதெல்லாம் அவர் மருந்து கொடுப்பதில்லை. அவர் நோயாளரின் தலையில் ஒரு பாதி வளைந்த இரும்பைத் தடவுவார். நோய் தீர்ந்து விடும். தேள் கொட்டலுக்கும் பாம்புக் கடிக்கும் பண்டிதர் மருந்து சிகிச்சை செய்வதில்லை. அவர் புன்னகை புரிந்து கொண்டே தமது தலையைச் சொரிவார். கூக்குரலிட்டும் அழுதும் புரண்டும் வந்தவர் சிரித்து நிற்பர். தீராத மயக்கங்களையெல்லாம் அயோத்திதாசர், ஆட்களை தமது முன்னை இருத்தி அவர்களை உற்று நோக்கி குணஞ் செய்வர். பண்டிதர் தமது செயல்களைப் பெருமிதமாகப் பேசுவதில்லை. அவர் சில நாள் பயிற்சி செய்தால் எல்லார்க்கும் இச்சக்தி உண்டாகும் என்பார்.

- உள்ளொளி, சாது அச்சுக் கூடம்,
சென்னை (5ம் பதிப்பு), பக். 23-24.



இரங்கற்பாமாலை

(கோலார், மாரிக்குப்பம் தென்னிந்திய சாக்கைய

பௌத்த சங்கத்தாரால் வெளியிடப்பட்டது (1915)

பூவினி லுண்மை மேவிய வண்மைத்
தொண்டர்த ணாடுந் தொண்டைமா நாடு
தொல்லைகாளத்தி முல்லை வாயிலூஉம்
அளிவல மொற்றி யொளிர்வல நாடு
பாலி வளமருள் பாலிநன் னாடு
திருவொடு கலையு மருவிடு நாடு
இத்திற நாட்டிடை நித்திலந் தூவி
அலைதொழு துலவு நலமலி மயிலையில்
இமிழ்திரை யெழுந்த அமிழ்தம தெனவே
செந்தமிழ்க் குலத்தில் வந்தவ னெவனோ
இளமையிற் கற்றோர் உளம்வழி நின்று
நூல்பல கற்ற சால்பின னெவனோ
தன்வந் திரிமுனி தமிழ்முனி தேரையர்
இன்னவ ரோருரு முன்னிவந் தாலென
ஈங்குளோர் புகழ ஓங்கி நாடொறும்
வயித்திய மணியாய் வழங்கின னெவனோ