பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 - சுந்தர சண்முகணார்

'இலக்கிய ஒப்புமை காண்டல்' என்னும் முறையில், பெண்களின் கண்கள் ஆண்களை வருத்துவதாகத் திருக்குறள்- காமத்துப் பாலில் உள்ள கருத்தையும் காண்போமே! ஒருத்தியைக் காதலிக்கும் ஒருவன் கூறுகிறான்: இவளுடைய கொடிய- வளைந்த புருவங்கள், கண்களைச் சுற்றி வளைத்துச் செல்லாமல், கண்களின் குறுக்கே, நேர் கோட்டில் சென்று கண்களை- கண்பார்வையை மறைத் திருக்குமாயின், இவள் கண்கள் நடுங்கத்தக்க துன்பத்தைக் கொடுத்திரா- என்ற கருத்துடைய குறள் வருமாறு:

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன் இவள் கண்

(1086) மற்றும்,

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து

(1091)

என்னும் குறளும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

எங்கள் வாழ்க்கை

முனிவர் முதலியோர் பல கூறி இராமனை வாழ்த்து கின்றனர். அவற்றுள் ஒரு புது முறையான வாழ்த்தும் உள்ளது. "மைந்தனே (இராமனே)! யாங்கள் எத்தனை யாண்டு காலம் வாழவேண்டும் என அமைப்பு உள்ளதோ. அத்தனை யாண்டு காலங்களையும் உன் வாழ்நாளுடன் கூட்டி மிகவும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!- என்பது அது.

மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கைநாள் யாவும் என்பார் (92)

என்பது பாடல் பகுதி. இது போன்ற ஒரு வாழ்த்து புறநானூற்றுப் பாடல் ஒன்றில் உள்ளது. சிறு குடி கிழான் பண்ணன் என்பவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாழ்த்துகிறான்: யான் வாழும் ஆண்டு காலம் எவ்வளவோ, அவ்வளவு ஆண்டு காலமும் கூட்டிப் பண்ணன் வாழ்க என்னும் பொருளில்,