பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 - சுந்தர சண்முகனார்

எதிரியாகிய பரசுராமனை வென்றமை, விசுவாமித்திரனது வேள்வி காக்க அரக்கர்களைக் கொன்றமை, தாடகை வதம்- முதலியன. மற்றும், கல்லை மிதித்து அகலிகையை எழுப்பிய அறச் செயல்- இன்ன பிறவற்றால் இராமனது புகழ் மிகுதியாகும்.

மற்றவரின் புகழ்ச் செயல்கள் இராமன் புகழுக்குப் பிற்பட்டவை என்று கூறாமல், இராமனது புகழைத் தழுவி' என்று கூறியிருப்பதன் பொருத்தம் என்ன? ஒருவர் எழுதிய சிறந்த நூல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு மற்றொருவர் எழுதிய நூலை முன்னதின் தழுவல் என்று கூறுதல் மரபு. தழுவலாகிய பின்னதை விட முன்னதே சிறப்புடையதாகக் கொள்ளலும் ஒருவகை மரபு. எனவே, தழுவல் என்பதற்கு, சிறப்பிலே மற்றதற்கு அடுத்தபடியானது என்று பொருள் கொள்ளலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால், இராமனது புகழை நோக்க மற்றவர் புகழ் அடுத்தபடியேயாகும் எனக் கொள்ளலாம்.

மற்றும், தழுவல்' என்பதற்கு உள் அடக்குதல்' என்ற பொருளும் உண்டு. முருகன் அன்பர் எதிரில் தனது பேருருவை உள்ளடக்கிக் கொண்டிருப்பான் என்ற கருத்தில், நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் 'அணங்கு சால் உயர் நிலை தழீஇ" (289ஆம் அடி) என்று பாடி யுள்ளார். தழிஇ என்றால் தழுவி என்பதாம் தழிஇ (தழுவி) என்பதற்கு உள்ளடக்கிக் கொண்டு என்று பொருள் எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். சகரர் முதலியோர் புகழ் நிலைத்து நிற்பது- அதாவது, அழியாமல் நிலைத்திருப்பது என்னும் பொருளில் பெரும் புகழ் நிற்பது' எனக் கம்பர் பாடியுள்ளார். இராமனது புகழை உள் அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவர்களின் புகழ் நிலைத்திருப்பதாகப் பொருள் கொண்டு புகழினைத் தழுவி' என்னும் தொடரைச் சுவைக்கலாம்.