பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 105

நகர் நீங்கு படலம்

இராமர் இருக்கும் இடம் அயோத்தி

இராமன் பிரிகிறானே என் வருந்தும் சுமித்திரைக்கு இராமன் ஆறுதல் கூறுகிறான். அன்னையே! யான் காடு செல்லினும், கடல் (கடலிடைத் தீவு) செல்லினும், வான் செல்லினும் அயோத்திக்கு யான் செல்வதைப் போன்றதே. எல்லாம் எனக்கு அயோத்தி போன்றனவே. எவரும் என்னை வெல்லமாட்டார். நீ உடலும் உயிரும் உணர்வும் நலிய வருந்தாதே- என்கிறான்.

கான்புக் கிடினும் கடல்புக் கிடினும் கலிப்பேர் வான்புக் கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான்புக்க தொக்கும் எனையார் நலிகிற்கு மீட்டார் ஊன்புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான்

(141)

'இராமர் இருக்கும் இடம் அயோத்தி' என்னும் வழக் காற்றின் தொடக்கப் புள்ளி' (Starting Point; இப் பாடலாய் இருக்குமோ! கானைத் தாண்டிப் பின் கடல் தாண்டி இலங்கைக்குச் செல்வதால், கான் புக்கிடினும் கடல் புக்கிடினும்' என்று கூறியது இயற்கையான பொருத்தமாயுள்ளது.

தோற்றல்

இராமன் பிரிவான் என்ற வருத்தத்தால், விளக்கம் குறைந்த மங்கையரின் முகங்கள் திங்களுக்குத் தோற்றனவாம்.

நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார்
சுந்தர வதனமும் மதிக்குத் தோற்றவே

(173)

என்பது பாடல் பகுதி, உவமிக்கும் (உவமைப்) பொருள்கள் எல்லாம் பெண்களின் உறுப்புகட்குத் தோற்றன என்று கூறலே பெரும்பான்மையான வழக்கம். இங்கே, திங்களை வென்றிருந்த பெண்களின் அழகிய முகங்கள்