பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 113

பந்தியில் தாங்கள் முதலில் அமர்ந்து விடுவார்கள். ஆனால், உயர்ந்த பண்பாளர்களோ, மற்றவர்களை உண்ணச் செய்து மேற்பார்வையிட்டுப் பிறகே தாம் உண்ணுவார்கள். குழுவாகப் பயணம் மேற்கொண்டவர்கட்குள் உயர்ந்த பண்பாளர்கள், மற்றவர்களையெல்லாம் வண்டியில் ஏறச் செய்த பிறகே தாம் ஏறுவர்; அந்த வண்டியில் இடம் போதாதெனின், தாம் அடுத்த வண்டியில் ஏறி வருவர். இவ்வாறே, பண்பாளனாகிய பரதனும், எல்லாரையும் ஏற்றிக் கங்கையைக் கடக்கச் செய்த பின்னரே, தான் படகில் ஏறினான். தாங்கள் முதலில் உண்டு விட்டுப் படுக்கையை விரித்துப் படுத்து விடுபவர்கள் போன்றவன் அல்லன் பரதன். அதனால் தான் அவன் மேல் ஏறினான்’ எனப் பாராட்டப்படுகிறான்.

திருவடி சூட்டு படலம்

அவலத்தின் படிவம்

காட்டிலிருந்து தன்னை அயோத்திக்கு அழைத்துப் போக வந்த பரதனை இராமன் கூர்ந்து நோக்கினான். அப்போது பரதன் இருந்த தோற்றமாவது:

கைகளைத் தலைமேல் உயர்த்திக் கும்பிட்டுத் தொழுது கொண்டிருந்தான்; உடம்பு துவண்டுபோயிருந்தது; கண்கள் அழுததால் நீரைச் சொரிந்தன; அவலம் (அழுகைத் துயர்) என்பது என்ன என்பதை அவனது உருவத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். அதாவது, அவலம் என்பது என்ன என்பதை அறிவிக்கும் வகையில் எழுதப்பட்ட படிவம் போன்றிருந்தான்:

தொழுதுயர் கையினன் துவண்ட மேனியன்
அழுதழி கண்ணினன் அவலம் ஈது என

அ. ஆ.-8