பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 115

இங்கே பரதனுக்கு ஏற்பட்ட அழுகை (அவலம்) என்பது, தந்தையை உலகினின்றும் இழத்தல், கொடுமை செய்தவள் ஆகையால் தாயை உயிர் இருக்கும் போதே இழத்தல், தமையனாகிய இராமனைப் பிரிவினால் இழத்தல், உள்ளம் நன்றாயில்லையாதலால் எல்லா இன்ப நுகர்வுகளையும் இழத்தல் ஆகிய அவலமாகும். இதனால் தான், கம்பர், அவலம் ஈது என எழுதிய படிவம் ஒத்து எய்துவான்' எனப் பரதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திருவடி சூட்டு படலம்

புகழினும் பெரியது

பாதுகையைப் பரதனுக்குத் தரவும் பதினான்கு ஆண்டு முடிந்ததும் மீண்டு வரவும் ஒத்துக் கொண்ட இராமன், மிகவும் உயர்ந்த பண்பாளன் அல்லவா? இதைக் கம்பர் குறிப்பிடுங்கால், 'தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான்' என்று கூறியுள்ளார். உலகில் புகழ் பெரியது. அதிலும் இராமன் புகழ் மிகப் பெரியது. அந்தத் தன் புகழைவிட இராமன் உயர்ந்தவனாம். ஒரு புதுமைக் கருத்தல்லவா இது!

இவ்வாறு முத்தான புதுமைகள் பல, பொலிவுற்றிருப் பதைக் கம்பன் பாடல்களில் கண்டு சுவைத்து மகிழலாம்.