பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 117

பயன்படுத்தும்போதே அவற்றிற்கு மதிப்பும் பொருளும் உண்டு. இதனால்தான், மொழியாசிரியர்கள், தனித்தனிச் சொற்களைத் தந்து சொந்த வாக்கியத்தில் வைத்துப் பயன்படுத்தக் கற்றுத் தருகிறார்கள். பொருள் தெளிவாக விளங்காத ஒரு சொல்லை ஒரு வாக்கியத்தில் வைத்துச் சொன்னால், அகராதியின்றியே பொருள் ஒரளவாயினும் புரியும். இத்தகைய வாக்கியத்திற்குத் தன் பொருளைத் தானே விளக்கும் வாக்கியம்' என்று பெயராம். இந்த அடிப்படையில், கம்பர் தக்க சொற்களைத் தக்க சொற்றொடர்களில் வைத்து ஆண்டிருக்கும் கலை யழகைச் சிறிது காண்போம்:

மந்திரப் படலம்

மந்திரக் கிழவர்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டுதல் தொடர்பாக சூழ்வு (ஆலோசனை) செய்வதற்காக மந்திரக் கிழவர்களை அவைக்கு அழைத்தானாம். மந்திரக் கிழவர் என்பவர் மந்திரிகள். இவர்கள் சூழ்வு (ஆலோசனை) சொல்வதற்கு உரியவர்கள். கிழமை என்பதன் பொருள்உரிமை. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கிழவன், கிழவி என்னும் சொற்கள் உரிமை உடையவர்கள்- தலைவர்- தலைவியர் - என்னும் பொருளில் ஆளப்பட்டிருப்பதைக் காணலாம். முருகாற்றுப்படை யில், முருகன் 'மலை கிழவோன்' எனப்படுகிறான். புறப்பாட்டில் குமணன் 'முதிரத்துக் கிழவன்' எனப் பட்டுள்ளான். “நின்னயந்து' என்று தொடங்கும் குமணனைப் பற்றிய அதே (163) புறப்பாட்டில், பெருஞ் சித்திரனார் தம் மனைவியை 'மனை கிழவோய்' என்று விளித்துள்ளார்.