பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 - சுந்தர சண்முகனார்

ஒரு மனையின் உரிமையாளர்கள்- தலைவர்கள் கிழவன்- கிழவி எனக் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் அகவை (வயது) முதிர முதிர உடல் தளர்ந்தனர். அப்போதும் இவர்கள் கிழவன்- கிழவி எனப்பட்டனர். நாளடைவில் அகவை முதிர்ந்தவர்கள் எல்லாரும் கிழவன்- கிழவி எனப்பட்டனர். இந்தச் சொற் பொருள் மாற்றத்தால், கிழவன்- கிழவி என்னும் சொல்லாட்சி இந்தக் காலத்தில் அகவை முதிர்ந்தவர்களையே குறிக்கலாயிற்று. எனவே, ‘மந்திரக் கிழவர்' என்பதற்கு, சூழ்வுரைக்கும் உரிமையுடைய தலைவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். இவர்கள் அகவை முதிர்ந்தவர்களாயிருப்பினும் அப் பொருளில் இவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது ஈண்டு கருதத் தக்கது.

இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை வருக என்று ஏவினான்
(3)

என்பது பாடல் பகுதி.

பிறத்து

உயர் பெருந் தேவர் மூவருள், நான்முகன் பிறக்க வைப்பவன் (படைப்பவன்); திருமாலுக்குக் காத்தல் தொழிலும் சிவனுக்குத் துடைக்கும் (அழிக்கும்) தொழிலும் உடையன. இங்கே, பிறக்க வைத்து' என்னும் பொருளில் பிறத்து' என்னும் சொல் ஆளப் பட்டிருப்பது ஒரு புதுமை. பாடல் பகுதி:

பிறத்து யாவையும் காத்து அவை பின்னுறத் துடைக்கும்
திறத்து முவரும் திருந்திடத் திருத்தும் அத்திறலோன்
(36)

என்பது பாடல் பகுதி:

வாள் உழவன்

தயரதன் வாள் உழவன் எனக் குறிப்பிடப்பட் டுள்ளான். வாளாகிய கலப்பையால் மார்பாகிய உடலாகிய வயலில் உழுபவன் என்பது இதன் விளக்கம்.