பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 121;


உடைமைப் பொருள் பன்மையாயிருந்தால் 'அ' உருபும் இடவேண்டும் என்று கூறியுள்ளார்- பெயரியல்:

''''ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அ வ்வும் உருபாம்...'''' (43)

என்பது நூற்பா. இந்த உருபுகள், உடைமைப் பொருள் அஃறிணையாயிருந்தால்தான் பயன்படுத்த ப்பட வேண்டும். உயர்திணைக்கு உடைய' என்னும் சொல் உருபைப் பயன்படுத்த வேண்டும் என உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். எடுத்துக்காட்டுகள்: எனது கை, எனாது கை, என கைகள், என்னுடைய மகன்.

ஆனால் கம்பர், உடைமைப் பொருள் உயர் திணையாயும் ஒருமையாயும் இருக்குமிடத்திலும் 'அ' உருபைப் பயன்படுத்தியுள்ளார்:

தானும் தன தம்முனும் அல்லது ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க

(116)

என்னும் பாடலில் உள்ள 'தானும்' என்பதற்கு 'இலக்குமணனும்' எனப் பொருள் கொள்ளவேண்டும். 'தன தம்முனும் என்பதற்குத் தன்னுடைய அண்ணனும் எனப் பொருள் கொள்ள வேண்டும். தம்முன்' என்றால் தனக்கு முன் பிறந்த தமையன் என்று பொருளாம். இங்கே 'தம்முன் என்பது இராமனைக் குறிக்கிறது. 'தன’ என்பது தன்னுடைய (இலக்குமணனுடைய) என்னும் பொருள் உடையது. உயர்திணை ஒருமையாகிய இராமனை தன தம்முன்' என 'அ' உருபு போட்டுக் குறிப்பிட்டுள்ளார் கம்பர். இது நன்னூல் கொள்கைக்கு மாறானது. நன்னூல் ஆசிரியராகிய பவணந்தி முனிவர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர். எனவே, பவணந்திக்கு முற்பட்ட காலத்தவராகிய கம்பரை நன்னூல் விதி கட்டுப் படுத்த முடியாது என்பதை எளிதில் உணரலாம்.