பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 - சுந்தர சண்முகனார்

பழிபடப் பிறந்தாய்

மேலும் கூனி கூறுகிறாள்: பேதையே! சீதையின் தந்தையாகிய சனக மன்னன், உன் தந்தை நாட்டின் மேல் படையெடுத்து அழிக்காதிருப்பதற்குக் காரணம், உன் கணவனாகிய தயரதன் தடுப்பான் என்ற அச்சமே. இந்த நிலையில், தயரதன் இறந்தபின் பட்டத்தில் இருக்கப் போகிறவன் இராமன்; அந்த இராமனுடைய மாமனார் சனகன். பிற்காலத்தில் சனகன் உன் தந்தையின் கேகய நாட்டின் மேல் படை எடுத்தால், இராமன் தன் மாமனாகிய சனகனுக்குத் தானே துணை செய்வான்? அப்போது உன் தந்தையின் நிலை (கதி) என்ன? தன் குலம் அழியப் பழிபடப் பிறந்தவர்கள் உனக்குத் துணையாக இணையாக யாரும் இருக்க முடியாது. எனவே, பரதனுக்குப் பட்டம் கிடைக்க ஆவன செய்க- என்று தூண்டினாள்:

காதல் உன் பெருங் கணவனை அஞ்சி அக் கனிவாய்ச்
சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தை வாழ்வு இனி உண்டோ? பேதை உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?

(82)

இவ்வாறு தன் சொல் திறமையால் கூனி கைகேயியின் நல்ல உள்ளத்தை நஞ்சாக்கி விட்டாள்.

கைகேயி சூழ்வினைப் படலம்

இயம்பினன் அரசன்

தயரதன் சொன்னதாக இராமனிடம் கைகேயி கூறுகிறாள்: உலகத்தைப் பரதன் ஆள வேண்டும் எனவும், நீ காடு சென்று தவம் புரிந்தும் நற்பயன் நல்கும் புனல்கள் ஆடியும் பதினான்கு ஆண்டு கழிந்தபின் வரவேண்டும் எனவும் அரசன் கூறினான்- என்று அரசன் ஆணையிட்டது போல் கூறினாள்: