பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

 தாழவுகள் இருக்கும். இனி, அயோத்தியா காண்டத்தில் உள்ள வேறுபாடுகளுள் ஒரு சிலவற்றைக் காண்பாம்:

தயரதன் இராமனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட எண்ணியதாகவே வான்மீகி கூறியிருக்க, கம்பரோ, முழு முடி சூட்ட விரும்பியதாக் கூறியுள்ளார்.

இராமனுக்கு முடி சூட்டைப் பற்றி அறிவிக்கும் வேளையில், தயரதனே இராமனுக்கு வேண்டிய அறநெறியைக் கூறியதாக வான்மீகி கூறியுள்ளார். வசிட்டர் அறநெறி கூறியதாகக் கம்பர் உரைத்துள்ளார்.

முடி சூட்டுவது தொடர்பாக, இராமனும் சீதையும் திருமாலின் கோயிலுக்குச் சென்றதாகக் கூறியிருப்பது வான்மீகம். இராமன் மட்டும் சென்றதாக அறிவித்திருப்பது கம்பனுடையது.

இராமன் இளம் பருவத்தில் கூனியின் முதுகில் வில்லிலிருந்து அம்பாக மண் உருண்டைகளை அடித்தான் என்பதாகக் கம்பர் பாடல் அறிவிக்கிறது. வால்மீகி இதை அறவே விட்டுவிட்டார்.

சுமந்திரன் தயரதனிடத்திலும் கைகேயினிடத்திலும் போய் வந்ததைப் பற்றிய செய்திகள், ஒருவர்க்கு ஒருவர் உரையாடிய கருத்துக்கள் முதலிய இரு நூல்களிலும் வேறு படுகின்றன.

இராமன் சீதையை நோக்கி, எனக்கு முடி சூட்டப் போகின்றனர்- நீ அரசி ஆகப் போகிறாய் என்று கூறிய தாக வால்மீகி எழுதியுள்ளார். கம்பர் இவ்வாறு கூறவில்லை.